சிஎஸ்கே புதிய தலைமை பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமனம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜாகீர் கான்.

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி நிர்வாகம், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கானை தங்களது புதிய தலைமை பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, 2027 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் முதல் அமலுக்கு வரவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான அனுபவம் பெற்ற ஜாகீர் கான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக கடந்த 16 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நியூசிலாந்து வீரர் ஸ்டீபன் பிளமிங், அணியின் கடைசி மூன்று சீசன்களாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாததால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பிளமிங்கின் விலகலுக்குப் பிறகு, அணியின் தற்போதைய பேட்டிங் பயிற்சியாளரான மைக்கேல் ஹஸ்ஸி அடுத்த தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், இந்திய வீரர் ஒருவரே பயிற்சியாளராக நியமிக்கப்பட வேண்டும் என்று தோனி வலியுறுத்தியதாகவும், அதற்கு ஹேமாங் பதானி முதல் தேர்வாக இருப்பார் என்றும் செய்திகள் பரவின.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக விளங்கிய ஜாகீர் கான் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜாகீர் கான், இந்திய அணிக்காக 14 ஆண்டுகள் விளையாடி, 2011 உலகக் கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றினார். ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சி குழுவில் இருந்தபோது, அந்த அணி 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்றது.

இதற்கு முன்னர், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மென்டராக பணியாற்றி வந்த ஜாகீர் கான், 2025 ஆம் ஆண்டு அந்த பொறுப்பிலிருந்து விலகினார். ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருந்த அனுபவம், சிஎஸ்கே அணியின் பௌலர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இருப்பினும், ஜாகீர் கான் பேட்ஸ்மேன்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிப்பார், மாறிவரும் டி20 கிரிக்கெட் சூழலுக்கு அவர் எந்த அளவிற்கு ஏற்ற பயிற்சியாளராக இருப்பார் போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஜாகீர் கானும் தோனியும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இந்த நியமனம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஜாகீர் கான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 311 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 282 விக்கெட்டுகளையும், சர்வதேச டி20 போட்டிகளில் 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் 100 போட்டிகளில் விளையாடி 102 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version