சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தொடர்கிறார்: தோனியின் பரிந்துரை!

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளைச் சந்தித்த போதிலும், தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கை ஐபிஎல் 2027 சீசனுக்கும் தக்கவைக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த அதிரடி முடிவின் பின்னணியில் முன்னாள் கேப்டன் தோனியின் செல்வாக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஐபிஎல் 2023 இல் சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே, கடந்த 3 ஆண்டுகளாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் ஏமாற்றி வருகிறது. குறிப்பாக, 2025 இல் புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்து வரலாற்றிலேயே முதன்முறையாக கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட சிஎஸ்கே, நடப்பு 2026 சீசனில் 8வது இடத்தையே பிடித்தது. இதனால் ஸ்டீபன் பிளெமிங்கின் பழைய உத்திகளை விமர்சித்து, அவரை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் சிஎஸ்கே ரசிகர்கள் பலர் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

இருப்பினும், இந்த விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் பிளெமிங்கின் ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு எம்.எஸ்.தோனி மற்றும் பிளெமிங் இடையே 2009 ஆம் ஆண்டு முதல் உள்ள அசைக்க முடியாத நட்பும், தோனியின் பரிந்துரையுமே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. வழக்கமாக அனுபவ வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சிஎஸ்கே, 2026 இல் பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா போன்ற இளம் வீரர்களை பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், வீரர்களின் காயம் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் மந்தமான பேட்டிங் போன்ற காரணங்களால் அணி ஒருங்கிணைப்பு இல்லாமல் தவித்தது.

காயம் காரணமாக கடந்த சீசனில் போட்டிகள் நடைபெறும் நாட்களில்கூட மைதானத்திற்கு வராமல் தோனி தள்ளியிருந்தார். அடுத்த 2027 சீசனின் போது தோனிக்கு கிட்டத்தட்ட 46 வயது ஆக உள்ளதால், அவர் வீரராக களம் இறங்குவாரா என்பது இன்னும் முடிவாகவில்லை. தற்போதைய சூழலில், தோனியின் முழு ஆதரவுடன் பிளெமிங் சிஎஸ்கேவின் தலைமை பயிற்சியாளராகத் தொடர்வது உறுதியாகியுள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version