நீட் தேர்வு குளறுபடி: 40 நாள் போராட்டம் அறிவித்த காங்கிரஸ்

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததால், மே 3ஆம் தேதி நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டதையடுத்து, லட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பாக கேரள மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் ரோஜி ஜான் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், 'கடந்த காலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், அதன் பிறகு என்ன நடந்தது, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த விவரங்கள் இல்லை. கடந்த 5, 6 ஆண்டுகளில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலை செய்துள்ளனர். வினாத்தாள் கசிவால் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் இதுவரை 14 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 3 பேர்' என்றார்.

மேலும், 'இந்தியாவில் நடைபெற்ற 94 வகையான தேர்வுகளில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. வருடத்திற்கு 6 கோடி மாணவர்கள் இந்த முறைகேடுகளால் பாதிக்கப்படுகின்றனர். ஒரு மாணவர் நீட் தேர்வுக்கு தயாராக குறைந்தபட்சம் 5 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரை செலவு செய்கிறார். இதன் அடிப்படையில் பார்த்தால், சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் வீணாகியுள்ளது' என்றும் அவர் தெரிவித்தார்.

'டிஜிட்டல் இந்தியா' என பெருமை பேசும் பாஜக அரசால், ஒரு தேர்வை கூட முறையாக நடத்த முடியவில்லை. நீட் தேர்வினால் மாணவர்களிடையே தீவிர மனநல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும்' என அமைச்சர் ரோஜி ஜான் வலியுறுத்தினார்.

'மத்திய அரசிடம் நாங்கள் 4 கோரிக்கைகளை முன்வைக்கிறோம். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும், நீட் தேர்வில் நடைபெறும் குளறுபடிகளை களைய வேண்டும், தேர்வு முறைகளை மாற்றி அமைக்க வேண்டும், அனைத்து தேர்வுகளுக்கும் வருடாந்திர அட்டவணைகள் வெளியிட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, 40 நாட்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெறும். அதன் நிறைவாக ஆகஸ்ட் 9ஆம் தேதி டெல்லியில் மிகப்பெரிய மாணவர் போராட்டம் நடத்தப்படும்' என அவர் கூறினார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version