கோவை: சர்வதேச தரத்தில் விளையாட்டு அரங்குகள் திறப்பு!

கோவை மாநகரில் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் பயன்பாட்டிற்காகவும், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வகையிலும் அமைக்கப்பட்டு வரும் உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கங்களின் பணிகள் விரைவில் நிறைவடையவுள்ளன. மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன், 83-வது வார்டு நேரு விளையாட்டரங்கம் அருகே உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் உள்விளையாட்டு அரங்கங்களின் பணிகளை ஆய்வு செய்தார்.

கைப்பந்து, இறகுப்பந்து, கபடி மற்றும் வுஷூ போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுக்கான உள்விளையாட்டு அரங்கங்களின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கைப்பந்து உள் விளையாட்டு அரங்கம் மற்றும் மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோவை எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பார்வையாளர் அரங்கம் அமைக்கப்படுகிறது.

அதே விளையாட்டு மைதானத்தில், தனியார் பங்களிப்புடன் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் மேற்கூரையுடன் கூடிய இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் மேற்கூரையுடன் கூடிய கபடி உள்விளையாட்டு அரங்கம், மற்றும் ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் மேற்கூரையுடன் கூடிய வுஷூ தற்காப்பு உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களுக்குள் உள் அரங்கு பணிகள் முழுமையடையும் என்றும், அவை விரைவில் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த அரங்கங்கள் சிறந்த தரத்தில் இருப்பதால், விளையாட்டு பிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், இதனால் இவற்றின் தேவை அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வின்போது உதவி ஆணையர் ச.நா.சண்முகம், உதவி பொறியாளர் சதீஷ்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version