கோவை சிறுமி கொலை: குற்றப்பத்திரிகை தயாரிப்பில் போலீஸ் தீவிரம்

கோவை அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியை காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக, சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் போக்சோ மற்றும் கடத்தல் பிரிவுகளின் கீழ் சூலூர் போலீசார் கைது செய்தனர். கைது நடவடிக்கையின் போது, போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற கார்த்திக் மாடியில் இருந்து கீழே குதித்ததில் அவரது கால், கை முறிந்து காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொரு குற்றவாளியான மோகன்ராஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி தலைமையில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், குற்றப்பத்திரிகை தயாரிப்பு பணியை துரிதப்படுத்துதல், கைது செய்யப்பட்ட இருவரையும் காவலில் எடுத்து விசாரித்தல், வழக்குக்கு தேவையான அறிவியல் பூர்வமான ஆதாரங்களை திரட்டுதல், வழக்கு தொடர்பாக கண்டறியப்பட்ட சாட்சிகளை முறைப்படுத்தி விசாரணைக்கு ஆஜர்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சிறுமி கடத்தப்பட்ட இடம், அடைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடம், சடலமாக மீட்கப்பட்ட இடம் ஆகிய இடங்களிலும் போலீசார் தீவிர ஆய்வு நடத்தி, முக்கிய தகவல்களை சேகரித்து வருகின்றனர். இந்த அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைத்து குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version