கரப்பான்பூச்சி ஜனதா கட்சி: உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு பகடி பதில்!

புதுடெல்லி: நாட்டில் வேலையில்லாத இளைஞர்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் 'கரப்பான்பூச்சிகள்' என குறிப்பிட்டதாகக் கூறப்படும் சர்ச்சை விவகாரத்தில், தற்போது 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' என்ற பெயரில் ஒரு எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நையாண்டிப் பக்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்களான மஹுவா மொய்த்ரா மற்றும் கீர்த்தி ஆசாத் ஆகியோர் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் நடந்த ஒரு விசாரணையின் போது, தலைமை நீதிபதி சூர்ய காந்த், 'கரப்பான்பூச்சிகளைப் போன்ற இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த வேலையும் இல்லை, எந்த தொழிலும் செய்வதில்லை. அவர்களில் சிலர் ஊடகவியலாளர்களாகவும், சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களாகவும், தகவல் அறியும் உரிமை ஆர்வலர்களாகவும் மாறி அனைவரையும் தாக்கத் தொடங்குகிறார்கள்' என்று கூறியதாக ஒரு செய்தி பரவியது.

சூர்ய காந்தின் இந்தக் கருத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், தலைமை நீதிபதியின் கருத்துக்கு எதிர்வினையாற்றும் விதமாக, நையாண்டித்தனமாக 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' என்ற பெயரில் ஒரு எக்ஸ் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பக்கத்தின் சுய விவரம், தலைமை நீதிபதி கூறியதை கேலி செய்வது போல் அமைந்துள்ளது. அந்தக் கட்சி தன்னை, இளைஞர்களின், இளைஞர்களால், இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் முன்னணி என்றும், மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயக சோம்பேறிகளின் கட்சி என்றும் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது.

'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'-யில் உறுப்பினராக இணைய சில தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. வேலையற்றவராக இருக்க வேண்டும், சோம்பேறியாக இருக்க வேண்டும், தொடர்ந்து இணையத்தில் – ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 11 மணி நேரம் – இருக்க வேண்டும். மற்றபடி, சாதி, மதம், பாலினம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'-யின் எக்ஸ் பக்கம் வேகமாக பிரபலமடைந்து, 24 மணி நேரத்துக்குள் 18,000-க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ளது.

இதனிடையே, தான் கூறிய 'கரப்பான்பூச்சி' கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் விளக்கம் அளித்துள்ளார். தனது கருத்துக்கள் நாட்டின் இளைஞர்களை குறிக்கவில்லை என்றும், மாறாக போலிச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி வழக்கறிஞர் தொழில் போன்ற தொழில்களில் நுழைந்தவர்களைக் குறிப்பிட்டே கூறப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 'போலி பட்டங்களின் உதவியுடன் வழக்கறிஞர் தொழில் போன்ற தொழில்களில் நுழைந்தவர்களைத்தான் நான் குறிப்பாக விமர்சித்தேன். இதேபோன்ற நபர்கள் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் உள்பட பல உன்னத தொழில்களிலும் ஊடுருவியுள்ளனர். அவர்கள் ஒட்டுண்ணி போன்றவர்கள்' என சூர்ய காந்த் தெரிவித்துள்ளார். ஊடகங்களின் ஒரு பிரிவு தனது கருத்துக்களை தவறாக மேற்கோள் காட்டியதைப் பார்த்தபோது வேதனையாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version