முதலமைச்சர் விஜய்யின் ஒரு மணி நேர பதிலுரை: சட்டப்பேரவையில் பரபரப்பு

சட்டப்பேரவையில் பதிலுரை ஆற்றும் முதலமைச்சர் விஜய்

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையை முதலமைச்சர் விஜய் ஒரு மணி நேரம் வழங்கியுள்ளார். காலை 9.35 மணிக்கு தனது உரையைத் தொடங்கிய அவர், 10.35 மணிக்கு நிறைவு செய்தார். இந்த உரையில், அவர் பல்வேறு முக்கிய விஷயங்களைத் தொட்டுப் பேசினார்.

முதலமைச்சர் விஜய் தனது உரையில், 'அண்ணா, எம்ஜிஆர், என்டிஆர், விஜய். இயற்கையும் இறைவனும் நம்ம பக்கம் தான் இருப்பார்கள். அன்புக்கு முன்னாடி அவர்கள் தோற்பது உறுதி. நாற்காலிக்காக அதிகாரத்திற்காக நான் இங்கு வரவில்லை, மக்களுக்கு நல்லது செய்யவும், நன்றி கடன் செய்யவும் மட்டுமே வந்துள்ளேன்' என்று குறிப்பிட்டார். மேலும், 'மக்களுக்கு நன்றி கடன் செலுத்துவதற்கு தான் அரசியலுக்கு வந்துள்ளேன். என்னுடைய பேச்சு இதயத்தில் இருந்து, 8 கோடி மக்களுக்கான பேச்சு' என்றும் அவர் வலியுறுத்தினார்.

திமுகவை மறைமுகமாக விமர்சித்த முதலமைச்சர், 'நாங்கள் மிசாவை பார்த்தோம், மிசாவை பார்த்தோம் என எதற்கெடுத்தாலும் அதை சொல்கின்றனர். 'பேசி பழகிய பொய், வாங்கிப் பழகிய கை, போட்டு பழகிய பை' என கவிஞர் கண்ணதாசன் திமுக குறித்து விமர்சித்திருந்தார். அதனை நான் தற்போது நினைவு கூற விரும்புகிறேன்' என்று கூறினார். மேலும், 'லோனுக்கு இ.எம்.ஐ. வாங்குவது போல, இன்ஸ்டால்மெண்ட்-ல் கமிஷன் வாங்கியிருக்கிறார்கள். டெண்டரில் கட்டாயப்படுத்தி கமிஷன் வாங்கியதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும் விசாரணை கமிஷனில் தெளிவாக கூறப்பட்டுள்ளது' என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

சட்டப்பேரவையில் சில உறுப்பினர்களின் பேச்சு குறித்து முதலமைச்சர் விஜய் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். 'இங்குள்ள ஒரு உறுப்பினர், எலும்பை உடைப்பேன் என்று பேசுகிறார். அவர் என்ன ஆர்த்தோ டாக்டரா? திமுகவுக்கு ஒட்டு போடாதவர்களுக்கு நல்ல சாவு வராது என ஒருவர் பேசுகிறார். இப்படி பேசியதால் தான், இவர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கிறார்கள்' என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றி கழக அரசின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்த முதலமைச்சர், 'இரண்டு பெண் தலைவர்களை கொள்கை தலைவர்களாகக் கொண்ட ஒரே அரசு, நமது தமிழக வெற்றி கழக அரசு. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதியளித்தார். மேலும், 'தமிழ்நாட்டில் பெண்கள் தொடர்பான கருத்துக்கள் ஆபாச நதியாக, வன்ம நதியாக ஓடுகிறது. இதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இரட்டை அர்த்தத்தில் பேசுவதை தமிழக மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நம் வீட்டில் இருக்கும் தாயாக, தங்கையாக நினைத்து பெண்களை பேச வேண்டும்' என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சந்தித்தார் அவமானங்களை நினைவு கூர்ந்த முதலமைச்சர், 'இதே சபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எவ்வளவு அவமானங்களை சந்தித்தார் என்பதை கேள்விபட்டுள்ளோம். அதுவும் இங்குள்ள எதிர்கட்சியால். அது போல் எந்த பெண்ணும் பாதிக்கப்படக்கூடாது' என்று கூறினார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீதான முறைகேடுகள் குறித்தும் முதலமைச்சர் விஜய் பேசினார். 'முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார், டாஸ்மாக் அமைச்சரோடு இணைந்து, ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரும் முறைகேடில் ஈடுபட்டுள்ளனர். அதில் சில தனிநபர்கள் பெயரும் இடம் பெற்றுள்ளது. அதில் ரத்தீஷ் என்ற நபரின் பெயரும் அடிபடுகிறது, ரத்தீஷ் உத்தரவின் அடிப்படையில் ஐஏஎஸ் அதிகாரிகள் செயல்பட்டனர். அவர் யாருக்கு நெருக்கமாக செயல்பட்டார்? நமது அரசு அமைந்த பிறகு அவர் துபாயில் சென்று ஒழிந்து விட்டார்' என்று அவர் தெரிவித்தார்.

2021 முதல் 2025 வரை நடைபெற்ற குற்ற சம்பவங்கள் குறித்து தரவுகளுடன் பேசும் எண்ணம் இருந்தாலும், அதைச் செய்ய மனம் இடம் தரவில்லை என்றும், அதுபோன்ற கீழான அரசியலைச் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் கூறினார். ஆளுங்கட்சியினராக இருந்தாலும் குற்றச்சாட்டுகள் எழுந்தால் வழக்குப் பதிவு செய்து, தேவையான இடங்களில் கைது செய்தும், கட்சியில் இருந்து நீக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version