வீட்டை சுத்தம் செய்ய இந்த பொருட்களை பயன்படுத்தாதீர்கள் – நிபுணர்கள் எச்சரிக்கை!

வீட்டை சுத்தம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை குறித்து நிபுணர்கள் விளக்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும்போது, சில குறிப்பிட்ட பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என தொழில்முறை வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சூப்பர் மார்க்கெட்டுகளில் வீட்டைச் சுத்தம் செய்யப் பலவிதமான இரசாயனங்கள் மற்றும் நவீன உபகரணங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவை 'அதிசயக் கருவிகள்' என விளம்பரப்படுத்தப்பட்டாலும், தினசரி வீடுகளைச் சுத்தம் செய்யும் நிபுணர்கள் இவற்றைத் தவிர்ப்பதாகக் கூறியுள்ளனர்.

டெக்சாஸ் மற்றும் கென்டக்கியைச் சேர்ந்த முன்னணி ஹவுஸ் க்ளீனிங் நிபுணர்களான அலெக்ஸ் வரேலா மற்றும் ரோண்டா வில்சன் ஆகியோர், எவ்வளவு விலை கொடுத்தாலும் தங்கள் வீட்டைச் சுத்தம் செய்ய இந்த பொருட்களை ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர். அவர்கள் தவிர்த்த சில முக்கியப் பொருட்கள் குறித்து விரிவாகக் காண்போம்.

முதலில், பாத்திரங்களைத் தேய்க்கப் பயன்படுத்தப்படும் சொரசொரப்பான ஸ்க்ரப்பர் ஸ்பாஞ்சுகளை வீட்டைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தத் தேவையில்லை என அலெக்ஸ் வரேலா கூறுகிறார். சரியான க்ளீனிங் லிக்விடை கறை படிந்த இடத்தில் ஊற்றி சிறிது நேரம் ஊற வைத்தால், அழுக்குகள் தானாகவே கரைந்துவிடும். இந்த சொரசொரப்பான ஸ்பாஞ்சுகளைப் பயன்படுத்துவதால் டைல்ஸ் மற்றும் சுவர்களில் உள்ள பெயிண்டுகளில் கீறல்கள் விழும் அபாயம் உள்ளது.

அடுத்து, இறகுகளால் ஆன தூரிகைகள் குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரோண்டா வில்சன் கூறுகையில், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் காட்டுவது போல் இறகுகளால் ஆன தூரிகைகளைக் கொண்டு துடைக்கும்போது, தூசிகள் மறைவது போல் தோன்றினாலும், அவை காற்றில் கலந்து மற்ற பொருட்களின் மீதுதான் வந்து அமரும். இதனால், உண்மையான சுத்தம் நடைபெறாது.

கடினமான நைலான் பிரஷ்களை வீட்டின் வெளிப்புறப் பகுதிகள் அல்லது மொட்டை மாடிகளைச் சுத்தம் செய்ய மட்டுமே பயன்படுத்த வேண்டும். குளியலறை டைல்ஸ் அல்லது வீட்டின் உட்புறச் சுவர்களில் இவற்றைப் பயன்படுத்தினால், அதன் கடினத்தன்மை தரை மற்றும் சுவர்களைச் சேதப்படுத்தும். அதற்குப் பதிலாக, மென்மையான பிரஷ்கள் கொண்ட எலக்ட்ரிக் பிரஷ்களைப் பயன்படுத்துவது சிறந்தது.

'நோ- ரின்ஸ்' லிக்விட்கள் எனப்படும், துடைத்த பிறகு தண்ணீர் ஊற்றிக் கழுவத் தேவையில்லை என விளம்பரப்படுத்தப்படும் திரவங்களை நம்பக் கூடாது. எந்தவொரு பொருளும் ஒரே துடைப்பில் அனைத்து கிருமிகளையும், பிசுபிசுப்பையும் நீக்கிவிடாது. துடைத்த பிறகு அதன் இரசாயனப் படிவம் அங்கேயே தங்கிவிடும். எனவே, க்ளீனரைப் பயன்படுத்திய பிறகு, ஒருமுறை ஈரத்துணியால் துடைப்பது அவசியம்.

குழந்தைகளின் உடலைத் துடைக்கப் பயன்படுத்தப்படும் பேபி வைப்ஸ் (Baby Wipes) வீட்டுச் சுத்திகரிப்புக்குப் போதுமானதாக இருக்காது. மேலும், இவை மட்காத குப்பையாக மாறி சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும். இதற்குப் பதிலாக, மைக்ரோஃபைபர் துணியில் சிறிதளவு ஆல்கஹால் அல்லது கிருமிநாசினி தெளித்துப் பயன்படுத்துவது சிறந்த மாற்றாகும்.

இறுதியாக, அல்ட்ரா லைட் (UV Light) கருவிகள் குறித்து ரோண்டா வில்சன் கூறுகையில், யூவி லைட் அடித்தால் கிருமிகள் அழிந்துவிடும் என விற்கப்படும் டார்ச் லைட்டுகள் வெறும் கண் துடைப்பே என்கிறார். இவை ஒரு போலி மனநிறைவைத் தருமே தவிர, முழுமையான சுத்திகரிப்பை அளிக்காது. அதற்குப் பதிலாக, தரமான கிருமிநாசினி ஸ்பிரே மற்றும் சுத்தமான துணியைப் பயன்படுத்துவதே மிகவும் சிறந்தது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version