சென்னையில் உள்ள புகழ்பெற்ற வடபழனி அருள்மிகு ஆண்டவர் முருகன் திருக்கோவிலில், இன்று செப்டம்பர் 1-ம் தேதி முதல் செல்போன்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் புதிய வழிகாட்டுதலின்படி, கோவிலின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும், பக்தர்களுக்கு ஆன்மீக அமைதியை உறுதி செய்யவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவிலின் கருவறை, பிரகாரங்கள் மற்றும் அனைத்து சன்னதிகளுக்குள்ளும் செல்போன் மூலம் புகைப்படம் எடுப்பது, வீடியோ எடுப்பது, செல்ஃபி எடுப்பது மற்றும் சமூக வலைத்தளங்களுக்கான ரீல்ஸ் எடுப்பது ஆகியவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும், கோவிலுக்கு வரும் முக்கிய பிரமுகர்கள் அல்லது திரைத்துறையினரை கோவில் வளாகத்திற்குள் வைத்து வீடியோ எடுக்கவோ அல்லது பதிவு செய்யவோ அனுமதி இல்லை என்றும் கோவில் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்த தடையை மீறி, ரகசியமாக செல்போன்களை கோவிலுக்குள் கொண்டு சென்றால், அவை பாதுகாப்பு ஊழியர்களால் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும். மேலும், குறிப்பிட்ட தொகையை அபராதமாகச் செலுத்த நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பக்தர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்லும் இந்த கோவிலில், செல்போன் தடை அமல்படுத்தப்பட்டதன் காரணமாக, பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது. பக்தர்களின் செல்போன்களைப் பாதுகாப்பாக வைப்பதற்காக, தெற்கு கோபுரம் அருகில் ஏற்கனவே இருந்த காலணி பாதுகாப்பு இடம், தற்போது செல்போன் பாதுகாப்பு மையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்த செல்போன் பாதுகாப்பு மையத்தில், பக்தர்கள் வெறும் ரூ.5 கட்டணம் செலுத்தி தங்களது செல்போனை ஒப்படைத்து டோக்கன் பெற்றுக்கொள்ளலாம். சாமி தரிசனம் முடித்து திரும்பும்போது, மீண்டும் டோக்கனை காண்பித்து தங்களது செல்போனைப் பெற்றுச் செல்லும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது பக்தர்களுக்கு பெரும் வசதியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கோவில் முன்புறப் பகுதியில் இடது மற்றும் வலது புறங்களில் இரண்டு இடங்களில் காலணிகளை வைப்பதற்கான இடமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள், கோவிலின் பாரம்பரியத்தையும் ஆன்மீகச் சூழலையும் மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளன. பக்தர்களின் ஒத்துழைப்புடன் இந்த விதிமுறைகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் என கோவில் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

