சென்னையில் திடீர் கருமேகம்: வானிலை மையம் பரபரப்பு விளக்கம்!

வெப்பத்தின் தாக்கம் உச்சத்தில் இருந்த சென்னையை இன்று காலை திடீரென சூழ்ந்த கருமேகங்கள், மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளன. சில நாட்களாக வாட்டி வதைத்த கத்திரி வெயிலால், பகல் நேரங்களில் மக்கள் வெளியில் நடமாடவே சிரமப்பட்டனர். இந்த திடீர் வானிலை மாற்றத்திற்கான காரணத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது விளக்கமளித்துள்ளது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம், விருகம்பாக்கம், கோயம்பேடு போன்ற இடங்களில் பலத்த தரைக்காற்று வீசியது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மெரினா கடற்கரையிலும் பலத்த புழுதி காற்று வீசியதால், நடைபயிற்சிக்கு வந்தவர்கள் அவதிப்பட்டனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, காவல் துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களை கடற்கரையை விட்டு வெளியேறவும், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடற்கரைக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தினர்.

இந்த திடீர் மேகமூட்டத்திற்குக் காரணம், மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி மற்றும் ஆந்திர கடலோரப் பகுதியை ஒட்டியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆகும். வழக்கமாக வீசும் வறண்ட காற்றுக்கு பதிலாக, வங்கக்கடலில் இருந்து குளிர்ந்த மற்றும் ஈரப்பதமான காற்று சென்னையை நோக்கி வீசத் தொடங்கியுள்ளது. இந்த அதிகப்படியான ஈரப்பதம் நிலப்பகுதிக்குள் நுழைந்ததால், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக கருமேகங்கள் உருவாகியுள்ளன.

இதன் விளைவாக, கடந்த சில நாட்களாக நிலவிய வெயிலின் தாக்கம் குறைந்து, பகல் நேர வெப்பநிலை சற்று மிதமாக உள்ளது. இந்த திடீர் தட்பவெப்பநிலை மாற்றத்தால், சென்னைவாசிகள் கோடை வெப்பத்தில் இருந்து தற்காலிகமாக விடுபட்டது போல் உணர்ந்து மகிழ்ச்சி அடைந்தனர்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version