சென்னை வெப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், சென்னை மாநகரில் செயல்படும் நட்சத்திர விடுதிகள் மற்றும் பார்களின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுடன் பெருநகர சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, பார் உரிமையாளர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, கோயம்பேடு பார் உரிமையாளர் சந்தோஷ் கூறுகையில், 'இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எந்த அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று காவல் ஆணையர் தெளிவாகக் கூறியுள்ளார். உரிமம் போன்ற சான்றிதழ்களைப் பெறுவதற்கு எந்தவிதமான கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என காவல் ஆணையர் கூறியது எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. பல வருடங்களுக்குப் பிறகு, லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை என்று ஒரு உயர் காவல் துறை அதிகாரி கூறியது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஒருவேளை காவல் துறையினர் லஞ்சம் கேட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கலாம் என்றும் ஆணையர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அரசு அனுமதித்த நேரக் கட்டுப்பாடுகளை மட்டும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், காலை 11 மணி முதல் இரவு 12 மணி வரை மட்டுமே எங்களுக்கு நேரக் கட்டுப்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனை மட்டும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும், சட்டத்திற்குப் புறம்பான எந்தச் செயலையும் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர். வழக்கமாக, பார் தொடர்பான விஷயங்களில் கூடுதல் ஆணையர் மற்றும் ஐஜி போன்ற உயர் அதிகாரிகள் மட்டுமே பேசுவார்கள். ஆனால், இந்த முறை காவல் ஆணையரே நேரடியாக எங்களுடன் பேசியுள்ளார். குறிப்பாக, பார் உரிமம் தொடர்பான ஆவணங்களை மேல் அதிகாரிகளுக்கு அனுப்ப பணம் கேட்டால், நேரடியாகப் புகார் தெரிவிக்கலாம் என காவல் ஆணையர் உறுதியளித்துள்ளார்' என்று தெரிவித்தார்.
இந்தச் சூழலில், சென்னை பெருநகர காவல் துறை சார்பில் ஒரு முக்கிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், 'சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை அனைவரும் நேர்மையாக, லஞ்சம் எதுவும் பெறாமல் தங்கள் பணிகளைச் செய்து வரும் வேளையில், ஒரு சிலர் செய்யும் தவறுகளால் காவல் துறைக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் நோக்கில், சென்னை பெருநகர காவல் துறையில் 'ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு' ஒன்று புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல், காவல் துறையினர் தங்கள் பணிகளைச் செய்ய லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் 78717-23000 என்ற கைப்பேசி எண்ணில் நேரடியாகவோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ தகவல்களைத் தெரிவிக்கலாம்' என்று காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாகத் தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும், பெறப்படும் அனைத்துத் தகவல்களும் உடனடியாக விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் தங்கள் பணிகளைச் செய்ய யாரும் எந்த வகையிலும் லஞ்சம் தர வேண்டாம் என்றும் சென்னை பெருநகர காவல் துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு, பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

