கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் திறக்க ஆம்னி உரிமையாளர் சங்கம் கோரிக்கை

தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளை மீண்டும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் அன்பழகன் முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தவும் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டது. இருப்பினும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையான வசதிகளையும், எளிதான அணுகலையும் வழங்கவில்லை என்பது பயணிகளின் கருத்தாக உள்ளது. தற்போது, சென்னையிலிருந்து கிளாம்பாக்கம் செல்ல பயணிகள் தனியார் வாகனங்கள் அல்லது கூடுதல் மாநகரப் பேருந்துகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் நேர விரயம், போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவை அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக, நகரின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் இருந்து வரும் பயணிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக பயணம் செய்து கிளாம்பாக்கம் செல்ல வேண்டியுள்ளது. கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ ரயில் அல்லது மின்சார ரயில் இணைப்பு இதுவரை முழுமையாக செயல்படுத்தப்படாததால், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பயன்பாடு கேள்விக்குறியாகியுள்ளது.

மாறாக, கோயம்பேடு பேருந்து நிலையம் சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்து மற்றும் பிற பொதுப் போக்குவரத்து வசதிகள் போதுமான அளவில் உள்ளன. இதனால், சென்னையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பயணிகள் எளிதாக கோயம்பேடு வந்து தென் மாவட்டங்களுக்குப் பயணிக்க முடியும். சென்னை நகருக்குள் தினசரி 10,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வெளியூர்களுக்குச் செல்லும் பேருந்துகள் சுமார் 3,000 மட்டுமே இயக்கப்படுகின்றன. எனவே, வெளியூர் பேருந்துகள்தான் சென்னை போக்குவரத்து நெரிசலுக்கான முக்கிய காரணம் என்ற கருத்து தவறானது.

எனவே, பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் பேருந்துகள் மற்றும் தென் மாவட்ட சேவைகளை மீண்டும் இயக்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version