பாக்யராஜின் கடைசி ஆசை: வைரமுத்து நிறைவேற்றிய நெகிழ்ச்சி

பாக்யராஜின் சுயசரிதை நூலுக்கு முன்னுரை வழங்கிய கவிஞர் வைரமுத்து

பிரபல நடிகர், இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியருமான கே. பாக்யராஜ், தனது 73வது வயதில் கடந்த மாதம் 27ஆம் தேதி சென்னையில் காலமானார். திடீர் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகிலும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பாக்யராஜ் தனது மறைவுக்கு முன்னர், தனது சுயசரிதை நூலுக்கு முன்னுரை எழுதித் தருமாறு கவிஞர் வைரமுத்துவிடம் பாசத்துடன் கேட்டுக்கொண்டதாக வைரமுத்து தெரிவித்துள்ளார். ஆனால், அந்த முன்னுரையை எழுதி முடிப்பதற்குள் பாக்யராஜ் மறைந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, பாக்யராஜின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், அவரது சுயசரிதைக்கான முன்னுரையை கவிஞர் வைரமுத்து எழுதி முடித்துள்ளார். அதனை பாக்யராஜின் மனைவி பூர்ணிமாவிடம் நேரில் சென்று ஒப்படைத்ததாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது பதிவில், 'படிச்சாப் புடிச்சிர்லாம்' என்ற தனது சுயசரிதை நூலை 17.06.2026 அன்று தனக்கு அனுப்பி, 'முன்னுரை எழுதிக்கொடுங்கள்' என்று பாக்யராஜ் அன்புடன் கேட்டுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அதற்கு 'கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்' என்று தான் கூறியதாகவும், அதற்கு பாக்யராஜ் 'சரி' என்றதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், 27.06.2026 அன்று பாக்யராஜ் மறைந்த செய்தி தன்னை நிலைகுலைய வைத்ததாக வைரமுத்து குறிப்பிட்டுள்ளார். அதன் பிறகு நூலைப் படிக்கப் படிக்க, பாக்யராஜ் பட்ட துன்பங்கள், ரணங்கள், அவமானங்கள் மற்றும் வறுமை ஆகியவை தன்னை வாட்டி எடுத்ததாகவும், அதனால் மிகுந்த உணர்ச்சிகரமான ஒரு முன்னுரையை எழுதி முடித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சாதாரண சூழ்நிலையாக இருந்திருந்தால், முன்னுரையை மின்னஞ்சலில் அனுப்பியிருப்பேன் என்றும், ஆனால் இந்தச் சூழலில் நேரில் சென்று அவரது மனைவியிடம் ஒப்படைப்பதே மிகுந்த மரியாதையாக இருக்கும் என்று கருதியதாகவும் வைரமுத்து கூறியுள்ளார்.

நேற்று மாலை பாக்யராஜின் இல்லம் சென்று, அவரது மனைவி திருமதி. பூர்ணிமாவிடம் முன்னுரையை வழங்கியதாகவும், அப்போது நடிகர் சாந்தனு உடனிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சுயசரிதை நூல் உயிர்த்துடிப்புள்ள புத்தகம் என்றும், இதனை யார் வெளியிட்டாலும் உடனடியாக வெளியிடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version