இந்தியாவில் உள்ள வங்கிகளில், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எந்தவித பணப் பரிவர்த்தனையும் செய்யப்படாத சேமிப்புக் கணக்குகள் 'செயலற்றவை' (Inactive) என வகைப்படுத்தப்படும். இது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் நடவடிக்கையாக இருக்கலாம்.
ஒரு கணக்கில் டெபாசிட், வித்டிராயல், டிரான்ஸ்ஃபர் அல்லது செக் பரிவர்த்தனை போன்ற எந்தவொரு செயல்பாடும் இரண்டு வருடங்களுக்கு மேல் நிகழாமல் இருக்கும்போது, அந்த கணக்கு செயலற்றதாகக் கருதப்படும். வங்கிகள் கிரெடிட் செய்யும் வட்டித் தொகை கூட இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.
கணக்கின் நிலை மாறினாலும், அது உடனடியாக மூடப்படாது. மாறாக, டெபிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங் போன்ற சேவைகளைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். செயலற்ற கணக்குகள் கணக்கியல் சிக்கல்களையும், மோசடிகளுக்கும் வழிவகுக்கும் என்பதால் வங்கிகள் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.
இருப்பினும், உங்கள் பணம் வங்கியில் பாதுகாப்பாக இருக்கும். அதற்கான வட்டி தொடர்ந்து சேர்க்கப்படும். ஆனால், வங்கி அறிக்கைகள் அல்லது அறிவிப்புகள் போன்றவற்றை உங்களால் பெற முடியாது. மேலும், வங்கி வழங்கும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளையும் பயன்படுத்த இயலாது.
ஒருவேளை உங்கள் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத பட்சத்தில், அதற்கான அபராதங்கள் தொடர்ந்து வசூலிக்கப்படலாம். இது ஒரு முக்கியமான விஷயமாகும்.
பெரும்பாலான வங்கிகள், செயலற்ற கணக்கை மீண்டும் செயல்பட வைப்பதற்கு வாடிக்கையாளர்களை நேரடியாக வங்கிக்கு வந்து KYC செயல்முறையை நிறைவு செய்யுமாறு அறிவுறுத்துகின்றன. சில வங்கிகள் முதலில் நெட் பேங்கிங் மூலம் பகுதி செயல்பாட்டைத் தூண்டி, பின்னர் நேரடி சரிபார்ப்பை மேற்கொள்கின்றன.
உங்கள் கணக்கை 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தாமல் இருந்தால், அதில் உள்ள தொகை டெபாசிட்டர் எஜுகேஷன் அண்ட் அவேர்னஸ் ஃபண்டுக்கு (Depositor Education and Awareness Fund) மாற்றப்படும். இருப்பினும், சரியான ஆவணங்களைச் சமர்ப்பித்து கணக்கை மீண்டும் செயல்படுத்திய பிறகு, அந்தப் பணத்தை நீங்கள் திரும்பப் பெற முடியும். இதற்கு வழக்கத்தை விட அதிக காலம் ஆகலாம்.

