பெட்ரோல் விலை உயர்வால் மக்கள் மின்சார ஸ்கூட்டர்களை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், சந்தையில் உள்ள சில மாடல்கள் அதிக விலை கொண்டவையாகவும், சில குறைந்த ரேஞ்ச் கொண்டவையாகவும் உள்ளன. இந்த சவால்களுக்கு தீர்வாக, ஏத்தர் எனர்ஜி நிறுவனம் குறைந்த விலையில், அதிக ரேஞ்ச் வழங்கும் புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
சமூக வலைதளங்களில் கசிந்துள்ள தகவல்களின்படி, 'ஏத்தர் கோனார்க்' என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய ஸ்கூட்டர், டிவிஎஸ் ஐகியூப், டிவிஎஸ் ஆர்பிட்டர் மற்றும் பஜாஜ் சேத்தக் போன்ற பிரபலமான பட்ஜெட் ஸ்கூட்டர்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதன்முறையாக, ஃபைபர் பேனல்களுக்கு பதிலாக உறுதியான மெட்டல் பாடி பேனல்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. இது ஹோண்டா ஆக்டிவா அல்லது பஜாஜ் சேத்தக் போன்ற ஸ்கூட்டர்களின் உறுதியான தன்மையை ஒத்திருக்கும். ஹேண்டிலில் பொருத்தப்பட்ட ஹெட்லைட், அகலமான தட்டையான ஃபுளோர்போர்டு, 14-இன்ச் பெரிய முன் சக்கரம் மற்றும் நீளமான வசதியான இருக்கை ஆகியவை தினசரி பயன்பாட்டிற்கும், பொருட்களை ஏற்றிச் செல்வதற்கும் மிகவும் ஏற்றதாக அமையும்.
புதிய EL பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் இந்த ஸ்கூட்டர், SR மற்றும் QR என இரண்டு சீரிஸ்களில் மொத்தம் 6 வேரியண்ட்களில் வெளியாகலாம். இதன் பேட்டரி திறனைப் பொறுத்து, 100 முதல் 200 கிலோமீட்டர் வரை சிறந்த ரேஞ்ச் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 0-ல் இருந்து 80% பேட்டரியை வெறும் 2 மணி நேரத்தில் சார்ஜ் செய்யும் அதிவேக சார்ஜிங் வசதியும் இதில் இடம்பெறும்.
குறைந்த விலை என்றாலும், ஏத்தர் நிறுவனம் இதில் ஸ்மார்ட் அம்சங்களுக்குப் பஞ்சமில்லை. ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி மற்றும் இன்பில்ட் நேவிகேஷன் வசதியுடன் கூடிய டிஜிட்டல் TFT டிஸ்ப்ளே இதில் உள்ளது. AtherStack 7.0 சாப்ட்வேர் மூலம் வாய்ஸ் கமாண்ட், பள்ளங்கள் குறித்த எச்சரிக்கை, விபத்து டோவிங் அலர்ட், ரிவர்ஸ் மோடு மற்றும் ஹில்-ஹோல்டு அசிஸ்ட் போன்ற பாதுகாப்பான அம்சங்களும் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
'ஏத்தர் கோனார்க்' ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.1 லட்சத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பேட்டரியை வாடகைக்கு எடுக்கும் திட்டத்திலும் இதை நிறுவனம் அறிமுகப்படுத்தலாம். பேட்டரி இல்லாமல் ஸ்கூட்டரை மட்டும் வாங்கினால், இதன் விலை மேலும் கணிசமாகக் குறையும். ஒட்டுமொத்தமாக, நடுத்தர குடும்பங்களுக்கு ஏற்ற, உறுதியான மற்றும் சிறந்த மதிப்புள்ள மின்சார ஸ்கூட்டராக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

