ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் தங்கப் பதக்கம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ளன. இந்த சூழலில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மோசின் நக்வி இந்திய அணிக்கு பதக்கங்களை வழங்கினால் என்ன நடக்கும் என்ற ஒரு புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கம் முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டி என்பது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அல்லது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான (BCCI) நடத்தும் தனிப்பட்ட தொடர் அல்ல. இது ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலால் நடத்தப்படும் ஒரு சர்வதேச விளையாட்டுத் தொடர் ஆகும். எனவே, பதக்கம் வழங்குபவர்கள் பட்டியலில் இருந்து குறிப்பிட்ட ஒரு நபரை நீக்க வேண்டும் என்றோ அல்லது தவிர்க்க வேண்டும் என்றோ இந்தியா முன்கூட்டியே நிபந்தனை விதிக்க முடியாது என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
முன்னதாக, 2025 ஆம் ஆண்டு ஆடவர் ஆசிய கோப்பை மற்றும் 2026 ஆம் ஆண்டு மகளிர் ஆசிய கோப்பை தொடர்களின் போது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரான மோசின் நக்வியிடம் இருந்து கோப்பைகளைப் பெற இந்திய அணி மறுத்ததாக ஒரு சர்ச்சை எழுந்தது. அதேபோன்ற ஒரு இக்கட்டான சூழல் இப்போதும் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இருப்பினும், ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் விதி எண் 66 இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணக்கூடும். இந்த விதியின்படி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் ஷேக் ஜோன் பின் ஹமத் அல் தானி அல்லது அவரால் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படும் பிரதிநிதிகளே பதக்கங்களை வழங்குவார்கள். இதனால், மோசின் நக்வி பதக்கம் வழங்கும் வாய்ப்பு தவிர்க்கப்படவும் இடமுள்ளது.
மேலும், கிரிக்கெட்டுக்கு சம்பந்தம் இல்லாத பிற அதிகாரிகளும் கூட பதக்கங்களை வழங்க வாய்ப்பு உள்ளது. இந்த விதிமுறை சர்ச்சைக்குரிய சூழலைத் தவிர்க்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆசிய விளையாட்டுப் போட்டி ஜெர்சி தொடர்பாக ஒரு குளறுபடி ஏற்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அது குறித்த உண்மையை JSW நிறுவனம் உடைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய ஆடவர் அணியும், மகளிர் அணியும் களத்திற்கு வெளியே நடக்கும் இத்தகைய சர்ச்சைகளைக் கடந்து, தங்கப் பதக்கத்தைத் தக்கவைப்பதில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகின்றன.
இந்திய அணிகள் தங்கப் பதக்கத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்க்கும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணிகளின் செயல்பாடு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

