பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்க: அண்ணாமலை வலியுறுத்தல்

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தவெக அரசு, தேர்தல் வாக்குறுதிகளில் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதாகக் கூறி ஆட்சிக்கு வந்தது. ஆனால், தற்போது ₹75,000 வரையிலான கடன் தொகை மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளது. இது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் விளைவாக, சேலம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் தங்களை சாட்டையால் அடித்துக்கொண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். கடந்த 1970 ஆம் ஆண்டு இதே நாளில், விவசாய மின் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு மூன்று பேர் கொல்லப்பட்டனர். 56 ஆண்டுகள் கடந்தும், அதே நாளில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக தங்களையே வருத்திக் கொள்ளும் நிலை இருப்பது வருத்தமளிக்கிறது.

கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவது அரசின் கடமை. கடந்த ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதாலேயே மக்கள் மாற்றம் வேண்டி தவெக அரசைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், பெயரில் மட்டுமே மாற்றம் இருப்பது துரதிருஷ்டவசமானது.

எனவே, உடனடியாக தவெக அரசு தங்கள் தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளை மேலும் வருத்த வேண்டாம் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version