ரூ.50 கோடி குதிரை பேர விவகாரம்: அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு!

தி.மு.க முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரூ.50 கோடி குதிரை பேர விவகாரம் தொடர்பாக, தி.மு.க முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், மூன்றாம் நாளாக திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூர் காவல் நிலையத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் கையெழுத்திட்டார். காவல் நிலையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் விஜி சரவணன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என தெரிவித்தார்.

தன்னை தி.மு.க-வில் இணைய அழைப்பதற்காக, தனது ஆதரவாளர் ஒருவர் ரூ.50 கோடி பேரம் பேசியதாக விஜி சரவணன் நேற்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அனிதா ராதாகிருஷ்ணன் கிண்டலாக பதிலளித்தார். 'யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் கூறலாம். நீங்கள் வேண்டுமென்றால் எனக்கு ஒரு 50 கோடி ரூபாய் வாங்கித் தாருங்கள். முதலில் 50 கோடி ரூபாய் எவ்வளவு இருக்கும் என்று தெரியுமா' என அவர் கேட்டார்.

மேலும், 'அவர் கூறும் அனைத்து தகவலும் முற்றிலும் தவறானது. நான் லாட்டரி வியாபாரம் செய்யவில்லை, கஞ்சா வியாபாரம் செய்யவில்லை. பழுத்த மரம் தான் கல்லடி படும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

தன்னை லாரி ஏற்றி கொலை செய்ய முயன்றதாக விஜி சரவணன் கூறிய குற்றச்சாட்டு குறித்தும் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளித்தார். 'ஒருவேளை அவர் லாரியை மடக்கி ரூ. 300 கேட்டு இருக்கலாம். கோபத்தில் அவர் மீது இந்த சம்பவம் நடத்திருக்கலாம்' என அவர் கூறினார்.

ஸ்ரீவைகுண்டம் த.வெ.க சட்டமன்ற உறுப்பினரான விஜி சரவணன், தன்னை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தி.மு.க-வில் இணைய அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர் ஒருவர் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும், அதற்கு இணங்க மறுத்ததால் மிரட்டல் விடுத்ததாகவும், லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாகவும் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அனிதா ராதாகிருஷ்ணன் அளித்துள்ள மறுப்பு, அரசியல் களத்தில் மேலும் விவாதங்களை எழுப்பியுள்ளது. உண்மை என்ன என்பது விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version