தமிழ்நாட்டில் அரிசி மற்றும் வெங்காய விலைகள் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் துயரங்களைப் போக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, அண்டை மாநிலமான ஆந்திராவில் செயல்படுத்தப்படும் மலிவு விலை அரிசி மற்றும் வெங்காய விற்பனை திட்டத்தை தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
கடந்த இரு மாதங்களாக அரிசி விலைகள் கிலோவுக்கு ரூ.17 முதல் ரூ.40 வரை உயர்ந்துள்ளன. ஜூலை மாதத்தில் இட்லி அரிசி விலை கிலோவுக்கு ரூ.8 வரையிலும், சன்னரக அரிசி விலை ரூ.15 வரையிலும், சில வகை அரிசி விலை ரூ.30 வரையிலும் உயர்ந்தன. இது குறித்து ஜூலை 22ஆம் தேதி அறிக்கை வெளியிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், விலை உயர்வு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு ரூ.50-க்கு விற்ற மைசூர் பொன்னி, ஆந்திரா பொன்னி அரிசி வகைகள் தற்போது ரூ.85 ஆக உயர்ந்துள்ளன. அதி சன்னரக அரிசி விலை ரூ.55-லிருந்து ரூ.95 வரை எகிறியுள்ளது. இட்லி அரிசி விலை ரூ.43-லிருந்து ரூ.60 ஆகவும், உயர் ரக இட்லி அரிசி ரூ.71 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
பருவமழை பொய்த்ததால் காவிரி பாசன மாவட்டங்களில் சாகுபடி குறைந்தது, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் நெல் உற்பத்தி குறைந்தது போன்ற காரணங்கள் கூறப்பட்டாலும், இது மட்டுமே விலை உயர்வுக்கு காரணம் அல்ல என அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஆண்டு அமோக விளைச்சல் இருந்தும், இந்த ஆண்டு குறுவை மற்றும் சம்பா பருவத்தில் நெல் விளைச்சல் குறையும் என்ற எதிர்பார்ப்பில், அனைத்து வகை அரிசிகளின் விலை செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அரிசி மட்டுமல்லாமல், பருப்பு வகைகள், சர்க்கரை, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தல், மொத்த வணிகர்களின் கையிருப்புக்கு உச்சவரம்பு நிர்ணயித்தல் போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். மேலும், மாநில அரசும் விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அண்டை மாநிலமான ஆந்திர அரசு, வெளிச்சந்தையில் அரிசி விலையைக் கட்டுப்படுத்த ரயத்து பசார் எனப்படும் உழவர் சந்தைகளில் தனிப்பிரிவு தொடங்கி, பாபட்லா சம்பா மசூரி, கே.என்.எம் சோனா மசூரி அரிசி வகைகளை கிலோ ரூ.50-க்கும், வெங்காயத்தை கிலோ ரூ.35-க்கும் விற்பனை செய்து வருகிறது. வெளிச்சந்தையில் ரூ.90-95 வரை விற்கப்படும் அரிசி, இங்கு பாதி விலைக்கு கிடைப்பதாலும், வெங்காயம் பாதிக்கும் குறைவான விலையில் கிடைப்பதாலும் அம்மாநில மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.
ஆனால், தமிழ்நாட்டில் சன்னரக அரிசி, வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலையைக் குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வெங்காயத்தை கிலோ ரூ.35-க்கு நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்ய தமிழக அரசு அறிவித்திருந்தாலும், மிகக் குறைந்த அளவே வெங்காயம் வழங்கப்பட்டதால் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்து விட்டது. அதைப் போலவே வெளிச்சந்தையில் அரிசி விலையைக் கட்டுப்படுத்தவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை இல்லை.
எனவே, ஆந்திர மாநில அரசைப் பின்பற்றி, தமிழ்நாட்டிலும் இலவசமாக வழங்கப்படும் அரிசி தவிர, சன்னரக அரிசியை கிலோ ரூ.50 என்ற விலையில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அரிசி ஆலைகள் மற்றும் மொத்த வணிகர்களிடம் உள்ள அரிசியில் 20 சதவீதத்தை அடக்க விலைக்கு கொள்முதல் செய்து, நியாயவிலைக் கடைகள் மூலம் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

