80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சகோதரிகள் அம்பிகா மற்றும் ராதாவுக்கு சொந்தமான சென்னை ஏஆர்எஸ் கார்டன் சொத்துக்கள் தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. சமீபத்தில், நடிகை ராதா சென்னை காவல் ஆணையரிடம் ஒரு புகாரை அளித்தார். அதில், தனது வீட்டில் இருந்த காசோலையை நடிகை அம்பிகா மற்றும் அவரது சகோதரர் மல்லிகார்ஜுன் குஞ்சன் நாயர் ஆகியோர் திருடி, 46 கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்றதாக குற்றம் சாட்டினார். மேலும், இது குறித்து பேச முயன்றபோது அம்பிகா தன்னை தொடர்பு கொள்ள மறுப்பதாகவும், வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுப்பதாகவும் கண்ணீருடன் செய்தியாளர்களிடம் ராதா தெரிவித்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த நடிகை அம்பிகா, 'ஏ.ஆர்.எஸ். சொத்தில் 50 சென்ட் நிலம் பங்கில் மோசடி நடந்துள்ளது. ஏ.ஆர்.எஸ். கார்டன் ஸ்டூடியோவில் மூன்றில் ஒரு பங்குரிமை எனக்கு உள்ளது. நிலம், தங்கம் உள்ளிட்ட மோசடிகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளை மறைத்து ராதா நாடகமாடுகிறார். அவரது புகார் உண்மைக்கு புறம்பானது' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சென்னை பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகை அம்பிகா, இது குறித்து மேலும் விளக்கமளித்தார். 'ஏஆர்எஸ் கார்டன் தொடர்பான விஷயத்தில்தான் இந்த பிரச்சனை. ஏஆர்எஸ் கார்டன் உருவாக முக்கிய காரணமாக இருந்தது நான்தான். இதை எம்.ஜி.ஆர். கொடுத்தார் என்பது தவறான தகவல். இது என் உழைப்பில் உருவானது. ஆனால், ஏஆர்எஸ் கார்டனில் உள்ள சொத்தில் இருந்து என் பெயரை நீக்கிவிட்டனர். என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இப்படி செய்தது வருத்தமளிக்கிறது. நான் என்ன இறந்து போய்விட்டேனா?' என்று வேதனையுடன் கேள்வி எழுப்பினார்.
மேலும், 'தங்கம் என்றாலே என் சகோதரி ராதாவிற்கு மிகவும் பிரியம். என் பெயரில் உள்ள தங்கத்தையும் அவர்தான் வைத்துள்ளார். சொத்து பிரச்சனையை தீர்க்க செக் கொடுத்தது ராதா தான். பின்னர் அதை நீக்கியதும் அவர்தான். செக் பவுன்ஸ் ஆனது, பணம் போனது எனக்கு. நான் தான் வழக்கு போட்டிருக்க வேண்டும். நான் உண்மையை சொன்னால் ராதா தான் சிறைக்கு செல்ல நேரிடும். செக்கில் கையெழுத்து போட்டுவிட்டு என் வீட்டில் ஏன் அதை வைக்க வேண்டும்? ஹேண்ட் பேக்கிற்கே லாக் போடும் ராதா இவ்வளவு பெரிய தொகையை வீட்டில் வைத்துவிட்டு போவாரா?' என்று அம்பிகா குற்றம் சாட்டினார்.
'ராதாவுடைய மகள் திருமணத்திற்கு நான் சென்று அனைத்து வேலைகளையும் வேலைக்காரி போல இழுத்து போட்டு செய்திருந்தேன். ராதா தான் எங்களுக்கு ரூ.97 கோடி தர வேண்டும். ஆனால் என் மீது மோசடி புகார் அளித்தது மிகவும் வேதனை அளிக்கிறது' என்றும் அம்பிகா கண்ணீருடன் தெரிவித்தார்.
தவறு செய்துவிட்டு முந்திக்கொள்வது போல் ராதா செயல்படுகிறார். குடும்ப விவகாரம் வெளியே தெரிய வேண்டாம் என நான் நினைத்தேன், ஆனால் ராதா அவ்வாறு செயல்படவில்லை. எங்கள் அம்மா நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஆகையால், சமரசம் பேச நினைத்தால் பேசுவோம். என்னுடைய இன்ஸ்டாகிராமில் 'படிக்காதவன்' படத்தில் வரும் 'பணம் காசக் கண்டுபுட்டா புலிக்கூட புல்லை தின்னும்' என்ற பாடலை ராதாவிற்கு தான் பதிவிட்டேன். என்னைத் திருடினாள் என்று ராதா சொன்னதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை' என்று அம்பிகா கண்கலங்கினார்.

