அதிமுகவில் இருந்து விலகுகிறாரா அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா?

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவுகள் தொடரும் நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா அக்கட்சியில் இருந்து விலக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் விரைவில் தவெகவில் இணையலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

முன்னதாக, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதி எம்.எல்.ஏ. சத்தியபாமா, ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. ஜெயக்குமார், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு தற்போது இசக்கி சுப்பையாவின் விலகல் பற்றிய செய்தி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, காங்கிரஸ் மற்றும் தவெக வேட்பாளர்களை விட 10,245 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் ஏற்கனவே 2011 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளிலும் இதே தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோது, அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா இவருக்கு அமைச்சர் பதவியை வழங்கி கௌரவித்தார். அம்பாசமுத்திரம் தொகுதி மக்களிடையே இசக்கி சுப்பையா மிகுந்த செல்வாக்கு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது விலகல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version