ருதுராஜை கேப்டனாக்க அஜித் அகர்கர் முயற்சி: பிசிசிஐ நிராகரிப்பு அம்பலம்

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் பதவியில் இருந்து அஜித் அகர்கர் விரைவில் விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, அவருக்கும் பிசிசிஐ நிர்வாகத்திற்கும் இடையே கடந்த காலங்களில் நடந்த பல ரகசிய மோதல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்த கருத்து வேறுபாடுகள் ரோஹித் சர்மா விவகாரத்தில் மட்டும் தொடங்கவில்லை, மாறாக 2023 ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டதாக ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்யும் போது இந்த சர்ச்சை வெடித்தது. அந்த தொடருக்கு வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், இது குறித்து அஜித் அகர்கர் அதிருப்தியில் இருந்ததாக தற்போது தெரிய வந்துள்ளது.

நீண்ட கால காயத்திலிருந்து மீண்டு வந்திருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பணிச்சுமையைக் குறைக்க அஜித் அகர்கர் விரும்பினார். எனவே, இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டை அந்தத் தொடருக்கு கேப்டனாக நியமிக்க அகர்கர் பரிந்துரைத்தார். ருதுராஜ் ஏற்கனவே 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்ததால், அயர்லாந்து தொடர் அவரது கேப்டன்சி எதிர்காலத்திற்கு மேலும் வலு சேர்க்கும் என்று அஜித் அகர்கர் வாதிட்டார்.

ஆனால், பிசிசிஐ நிர்வாகிகள் அஜித் அகர்கரின் ஆலோசனையை அதிரடியாக நிராகரித்தனர். அணியை வழிநடத்த பும்ரா மிகுந்த ஆர்வமாக இருப்பதாகக் கூறி, அகர்கரின் விருப்பத்திற்கு மாறாக பும்ராவையே கேப்டனாக பிசிசிஐ நியமித்தது. இந்தத் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வென்றது.

தேர்வுக் குழு தலைவராக பொறுப்பேற்ற தனது இரண்டாவது தேர்வுக் கூட்டத்திலேயே அஜித் அகர்கரின் முடிவை பிசிசிஐ புறந்தள்ளியது. தொடர்ந்து இதுபோன்ற நிர்வாகத் தலையீடுகளும், முக்கிய முடிவுகளில் ஏற்பட்ட முரண்பாடுகளுமே தற்போது அஜித் அகர்கர் பதவி விலக முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

சமீபத்தில் ரோஹித் சர்மாவை ஒருநாள் அணியில் இருந்து நீக்க அகர்கர் முடிவு செய்தபோது, பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா, ரோஹித் சர்மா 2027 ஒருநாள் உலகக்கோப்பை வரை விளையாடுவார் என ஊடகங்களில் பேட்டி அளித்திருந்தார். இந்த விவகாரம் காரணமாக அஜித் அகர்கர் தனது பதவி நீட்டிப்பை மறுத்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version