சென்னைக்கு புதிய பசுமை விமான நிலையம் அமைப்பது அவசியம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இருப்பினும், எந்த இடத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என்பதில் தான் தற்போது சிக்கல் நீடிப்பதாகவும், இதுகுறித்து பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அருண்ராஜ், "புதிய விமான நிலையத்திற்கான இடம் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். சற்று பொறுத்திருந்து பாருங்கள். மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையிலும், வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையிலும் இந்த திட்டம் நிச்சயம் கொண்டுவரப்படும்" என உறுதியளித்தார்.
மேலும், சட்டமன்றத்தில் எதிர்கட்சியான திமுக ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைத்தால், அவர்களுடன் இணைந்து விவாதிக்க தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஆனால், திமுகவின் கடந்த கால ஆட்சி மற்றும் தலைவர்கள் குறித்து பேசுவதற்கு தங்களுக்கு போதுமான நேரம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எந்தவொரு விவாதம் குறித்தும் பதில் அளிக்க தயாராக இருப்பதாகவும், திமுகவின் ஆக்கப்பூர்வமான பேச்சுகளுக்கு தாங்களும் பதிலளிப்போம் என்றும் அவர் கூறினார்.
பருவமழையால் டெங்கு பாதிப்பு சற்று அதிகரித்துள்ளதாகவும், இந்த ஆண்டு டெங்கு பாதிப்பால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். பருவகால காய்ச்சல்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களிடம் அமைச்சர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், கடந்த ஆட்சியில் அவர்களை பேச்சுவார்த்தைக்குக் கூட அழைக்கவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் விரைவில் ஒரு சுமூகமான முடிவு எட்டப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடல் உறுப்பு தானத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றும் அமைச்சர் அருண்ராஜ் திட்டவட்டமாக தெரிவித்தார். தனியார் மருத்துவமனைகளில் பதிவு செய்துள்ள தகுதியான நபர்களுக்கு மட்டுமே, பதிவு அடிப்படையில் உறுப்புகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் கீழ் உறுப்பு தானம் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கினார்.
அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் பதிவு செய்தவர் என்ற பாகுபாடு இன்றி, உறுப்பு மாற்று சிகிச்சைக்காக பதிவு செய்துள்ளவர்களின் காத்திருப்பு பட்டியலின் அடிப்படையிலேயே உறுப்புகள் ஒதுக்கப்படுகின்றன. இதற்கென ஒரு குழுவும், நிலையான வழிகாட்டுதல்களும் நடைமுறையில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

