அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் குதிரை பேரம் நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டி, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை ஆகியோர் சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று புகார் மனுவை அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை, 'குதிரை பேர நடவடிக்கைகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். லஞ்ச ஒழிப்புத் துறையினர் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காததால்தான், நேரடியாக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம்' என்று தெரிவித்தார்.
மேலும், 'ஆறு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சி நடந்துள்ளது. ஜனநாயக விரோதமான இந்த செயல்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்றும் அவர் வலியுறுத்தினார்.
தற்போதைய தமிழ்நாடு அரசு, தங்களை விமர்சிப்பவர்களைக் குறிவைக்க காவல்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாகவும் இன்பதுரை குற்றம் சாட்டினார். குறிப்பாக, சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதாக வழக்கறிஞர் இந்திராணி என்பவரைக் கைது செய்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
'அவதூறு வழக்கு தொடுப்பதற்குப் பதிலாக, சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுகிறது. தவறான தகவல்களைப் பரப்பினால், அவர்கள் அவதூறு வழக்கு தொடரட்டும். அதற்கு நாங்கள் அஞ்சமாட்டோம்' என்று இன்பதுரை ஆவேசமாகப் பேசினார்.
அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியதாகக் கூறப்படும் விவகாரம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

