தமிழகத்தில் சர்க்கரை விலை உயர்வால் மக்கள் சந்திக்கும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, பொங்கல் பண்டிகை வரை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 2 கிலோ கூடுதல் சர்க்கரையை வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் வெள்ளை சர்க்கரையின் விலை வரலாறு காணாத வகையில் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை உயர்ந்து, தற்போது ரூ.75 முதல் ரூ.80 வரை விற்பனையாகிறது. வரவிருக்கும் தீபாவளி பண்டிகை காலங்களில் இந்த விலை மேலும் உயர்ந்து ரூ.100ஐ எட்டும் என வணிகர்கள் கணித்துள்ளனர். ஒருபுறம் கரும்பு விவசாயிகளுக்கு உரிய கொள்முதல் விலை கிடைக்காத நிலையில், மறுபுறம் சர்க்கரை விலை உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கிறது. இது மிகுந்த கவலையளிக்கிறது.
மத்திய அரசு, வாகன எரிபொருளில் எத்தனால் கலப்பதை ஊக்குவிக்கும் வகையில், சர்க்கரை ஆலைகள் வெள்ளை சர்க்கரை உற்பத்தியை விட மொலாசஸ் எனப்படும் கரும்பு வெல்லப்பாகு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இதில் ஓரளவு உண்மை இருக்கலாம். இருப்பினும், தேசிய அளவிலும், மாநில அளவிலும் கரும்பு சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து வருவதுதான் இதன் முதன்மையான காரணமாகும். தேசிய அளவில் 2022-23ஆம் ஆண்டில் 58.85 லட்சம் ஹெக்டேராக இருந்த கரும்பு சாகுபடி பரப்பு, 2023-24ஆம் ஆண்டில் 54.49 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. தமிழகத்தில் 2020ஆம் ஆண்டுக்கு முன்பு 15 லட்சம் ஏக்கராக இருந்த கரும்பு சாகுபடி பரப்பு, 2025ஆம் ஆண்டில் வெறும் 5 லட்சம் ஏக்கராக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், தமிழகத்தில் 2018ஆம் ஆண்டில் 2.8 கோடி டன்னாக இருந்த சர்க்கரை உற்பத்தி, 2024ஆம் ஆண்டில் 1.59 கோடி டன்னாக சரிந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம், கரும்புக்கான உற்பத்திச் செலவு அதிகரித்திருந்தாலும், அதற்கேற்றவாறு கரும்பின் கொள்முதல் விலை உயர்த்தப்படாததுதான். இந்த நிலை மாறினால் மட்டுமே சாகுபடி பரப்பு அதிகரித்து, சர்க்கரை உற்பத்தி பெருகி, விலை குறையும். ஒரு டன் கரும்பிலிருந்து சர்க்கரை, மொலாசஸ், சக்கை போன்ற துணைப் பொருட்களின் மூலம் சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.21,000க்கும் மேல் வருமானம் கிடைக்கும் நிலையில், அவர்கள் ஒரு டன் கரும்புக்கு ரூ.5,000 கூட கொள்முதல் விலையாக வழங்க மறுப்பது அநீதியாகும். ஒரு டன் கரும்பில் இருந்து சராசரியாக ஒரு குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்ய முடியும். தற்போது ஒரு குவிண்டால் சர்க்கரையின் விலை ரூ.7,000 ஆக உயர்ந்துள்ள நிலையில், அதே விலையை ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலையாக நிர்ணயிக்க வேண்டும். சர்க்கரை உற்பத்தியில் கிடைக்கும் துணைப் பொருட்களின் மூலம் கிடைக்கும் வருமானம் ஆலைகளுக்கு லாபமாக அமையும்.
ஆனால், மத்திய அரசு ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலையை இயல்பாக வழங்க வேண்டிய விலையில் பாதியளவுக்குக் குறைவாக, வெறும் ரூ.3,383 என அறிவித்துள்ளது. இதை குறைந்தபட்சம் ரூ.5,000 என்ற அளவிற்காவது அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் கரும்பு சாகுபடி பரப்பும், சர்க்கரை உற்பத்தியும் அதிகரிக்கும்.
இந்த விலை உயர்வால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைக் குறைக்கும் வகையில், நடப்பு மாதம் முதல் பொங்கல் பண்டிகை வரை, அதாவது அடுத்த 6 மாதங்களுக்கு, நியாயவிலைக் கடைகளில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் தலா 2 கிலோ கூடுதல் சர்க்கரையை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

