தவெகவில் இணைந்த எம்எல்ஏக்கள்: பழனிசாமிக்கு தவெக பதிலடி

தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கு தவெக பதிலடி கொடுத்துள்ளது. 'உங்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கே உங்கள் மீது நம்பிக்கை இல்லை. தொடர் தோல்விகளை சந்திக்கும் தலைமையின் கீழ் இருக்க விரும்பாமல், அவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் எங்களிடம் வந்துள்ளனர்' என தவெக தெரிவித்துள்ளது.

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, 'கீழ்தளத்தில் ராஜினாமா, மேல்தளத்தில் கட்சியில் இணைப்பு என்றும் தமிழ்நாட்டில் கீழ்த்தரமான அரசியலை, குதிரை பேர கலாச்சாரத்தை தவெக அறிமுகப்படுத்தியுள்ளது' என காட்டமாக விமர்சித்திருந்தார்.

தவெக ஐடி விங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம்தான் கொடுக்க முடியும் என்பதை அறியாத ஒருவர், பல முறை ஆட்சி செய்த கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார் என்பதை எண்ணி தமிழக மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய சட்டப்பேரவை செயலகத்துக்குத்தான் வர வேண்டும். இதுதான் ஜனநாயகம் வகுத்த வழிமுறை. இந்த அடிப்படை தெரியாமல் உளற வேண்டாம். தொடர் தோல்விகளால் புலம்பாதீர்கள். சரிந்து வரும் உங்கள் அரசியல் சாம்ராஜ்ஜியத்தை எங்களின் மீது பழிபோட்டு காப்பாற்ற முடியாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 'ஒரு பலவீனமான தலைமை, தன் தோல்வியை மறைப்பதற்காக அரசு மீதும் நமது கட்சியின் மீதும் பழி போடுகிறது. உங்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கே உங்கள் மீது நம்பிக்கை இல்லை. தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் ஒரு தலைமையின் கீழ் இருக்க விரும்பாமல், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நமது தலைவரின் ஆற்றலை மதித்து, மக்கள் சேவை செய்ய அவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் வந்து இணைந்துள்ளனர். சாதாரண கட்சி மாறுபவர்கள் பதவியைக் காப்பாற்றப் பார்ப்பார்கள். ஆனால், இங்கு அவர்கள் பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டு, மக்களின் மறுதேர்தலைச் சந்திக்கத் தயாராக வந்துள்ளனர். கூவத்தூரில் என்ன நடந்தது என்பதை இந்த நாடே அறியும். அன்று சொகுசு விடுதியில் அடைத்து வைத்து, பதவிகளைக் காப்பாற்ற நடத்தப்பட்ட நாடகங்களை மக்கள் மறக்கவில்லை. ஆனால் இன்று, தார்மிகப் பொறுப்பேற்று, தங்களின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்துவிட்டு, மக்கள் மன்றத்தை மீண்டும் சந்திக்கத் துணிவோடு வந்துள்ளார்கள். தேர்தலில் மக்கள் உங்களை நிராகரித்துவிட்டார்கள். இப்போது உங்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களே உங்களை நிராகரித்து வருகிறார்கள். எங்களின் கவனம் முழுவதும் மக்கள் மேம்பாடு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சியை நோக்கியே உள்ளது' என்றும் தவெக தெரிவித்துள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version