சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மிருணாளினி ரவி. இவர் சாம்பியன், எனிமி, எம்ஜிஆர் மகன், கோப்ரா, ரோமியோ போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். புதுச்சேரியை பூர்வீகமாகக் கொண்ட இவர், பெங்களூரில் தனது பள்ளிப் படிப்பை முடித்து, அங்கேயே ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
நடிகை மிருணாளினி ரவி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் 'ரோமியோ'. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த இந்தப் படம் 2024 ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு மிருணாளினி நடிப்பில் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், பிரபல ஆன்மீகப் பேச்சாளரான மகா விஷ்ணுவை தனது காதலர் என நடிகை மிருணாளினி ரவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'உங்களைக் காதலிக்கத் தொடங்கும் போது, என்னை நானே காதலிப்பது போல் உணர்கிறேன். ஒவ்வொரு பிறவியிலும், ஒவ்வொரு பிரபஞ்சத்திலும், நான் எப்போதும் உங்களையே தேர்ந்தெடுப்பேன்' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், மகா விஷ்ணுவுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
யார் இந்த மகா விஷ்ணு?
மகா விஷ்ணு, பரம்பொருள் அறக்கட்டளையை நடத்தி வந்தவர். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு அரசுப் பள்ளியில் இவர் ஆற்றிய உரையின் போது, 'முன் ஜென்மத்தில் செய்த பாவங்களால் ஒருவர் மாற்றுத்திறனாளியாகப் பிறக்கிறார்' என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அவருடன் மகா விஷ்ணு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த நிகழ்வு பரவலாக விமர்சிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் விதமாகப் பேசியதாக அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர், தனது மகாவிஷ்ணு அறக்கட்டளையை மூடுவதாகவும் கடந்த ஆண்டு அவர் அறிவித்திருந்தார்.
தற்போது, நடிகை மிருணாளினியுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தச் சூழலில், மகா விஷ்ணுவின் சர்ச்சைக்குரிய பின்னணி குறித்த கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன.
மிருணாளினி ரவி தனது காதலை வெளிப்படுத்தியிருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே சமயம், மகா விஷ்ணுவின் கடந்த கால சர்ச்சைகள் குறித்த விவாதங்களும் சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளன. இந்த விவகாரம் குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

