சூர்யாவிற்கு அரசியல் எண்ணம் இல்லை: நற்பணி இயக்கம் விளக்கம்

நடிகர் சூர்யா அரசியலில் ஈடுபடப்போவதாக வெளியான வதந்திகளுக்கு அவரது நற்பணி இயக்கம் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய வீரமணி என்பவர், 'சூர்யா மக்கள் தலைவராக வருவதை யாராலும் தடுக்க முடியாது' என்று கூறியதாக செய்திகள் பரவின. இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளானது.

இந்நிலையில், நற்பணி இயக்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்ட இரா.வீரமணி தனது கருத்தை தனிப்பட்ட கருத்து என்று குறிப்பிட்ட பின்னரே பகிர்ந்துகொண்டதாகவும், அவரது உரையை தவறான விளக்கத்துடன் சமூக வலைதளங்களில் பரப்பி, அது மன்றத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக இரா.வீரமணி மன்றத்தின் நிர்வாகத்தில் இல்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யாவிற்கு அரசியலுக்கு வருவதற்கான எந்தவித எண்ணமும் இல்லை என்றும், அகரம் அறக்கட்டளை மற்றும் நற்பணி இயக்கத்தின் மூலமாக மக்களுக்கான சமூகச் சேவைகளை தொடர்ந்து ஆற்றி வருவதே அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்து வருவதாகவும் நற்பணி இயக்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எனவே, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் நிலைப்பாடுகள் செயல் தலைவர் ராஜ் மற்றும் அமைப்பாளர் ஹரிராஜ் ஆகியோரின் மூலமாக மட்டுமே வெளியிடப்படும் என்றும், எனவே அனைவரும் மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதாகவும் நற்பணி இயக்கம் தெரிவித்துள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version