கோடை காலத்தில் பால் கொள்முதல் குறைவு மற்றும் 'கிரீன் மேஜிக்' பால் விற்பனையில் ஏற்படும் கடும் நிதி இழப்பு காரணமாக, ஆவின் 'கிரீன் மேஜிக்' பால் விநியோகம் நிறுத்தப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் 60 முதல் 70 சதவீதம் வரை திடீரென குறைக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இது முழுமையாக நிறுத்தப்படவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் தினசரி 14 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது. இதில், 4.5% கொழுப்புச் சத்து கொண்ட கிரீன் மேஜிக் பால் மட்டும் சுமார் 7.5 லட்சம் லிட்டர் வரை விற்பனையாகி வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக இதன் விநியோகம் 2.5 லட்சம் லிட்டராகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆவின் நிறுவனம் கிரீன் மேஜிக் பாலை லிட்டருக்கு 44 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. ஆனால், இதன் உற்பத்திச் செலவு சாதாரண காலங்களில் 48 – 49 ரூபாயாகவும், கோடை காலத்தில் 51 ரூபாய் வரையிலும் உயர்கிறது. இதனால், ஒவ்வொரு லிட்டர் பாலுக்கும் 4 முதல் 5 ரூபாய் வரை ஆவின் நஷ்டத்தை சந்திப்பதாகக் கூறப்படுகிறது. அதே சமயம், தனியார் நிறுவனங்கள் இதே தரத்திலான பாலை 64 முதல் 68 ரூபாய் வரை விற்பனை செய்கின்றன.
மேலும், தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது ஆவின் கொள்முதல் செய்யும் பாலில் கொழுப்புச் சத்து குறைவாக உள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகளின்படி, கொழுப்புச் சத்தை சமன் செய்ய வெளிச்சந்தையில் இருந்து வெண்ணெய் வாங்க வேண்டியுள்ளது. இதற்காக மட்டும் மாதம் 65 முதல் 75 கோடி ரூபாய் வரை கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளதாக ஆவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

