‘தமிழ்நாட்டில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக முடியாது’ – திருமாவளவன்

'தமிழ்நாட்டில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் வளர்ச்சி அடையவில்லை' என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து தன்னை முதலமைச்சராக்க முயற்சி செய்ததாக வெளியான செய்திகளுக்கு விளக்கம் அளித்து அவர் வெளியிட்ட பதிவில்தான் இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

'இன்று சில செய்தியாளர்கள் என்னைச் சந்தித்தனர். அவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது, 'உங்களை முதலமைச்சராக்க நடைபெற்ற முயற்சியை காங்கிரஸ் முறியடித்துவிட்டதாகச் சொல்கிறார்களே?' என்று ஒரு செய்தியாளர் கேட்டார். அதற்கு நான், 'அப்படி ஒரு முயற்சி நடந்ததாக எனக்கும் தகவல் கிடைத்தது' என்று பதில் அளித்தேன்.

எனக்கு நெருக்கமான நண்பர்கள் சிலர் இதுபற்றி என்னிடம் பேசினார்கள் என்பதை மட்டுமே நான் குறிப்பிட்டேன். 'திமுகவோ அல்லது அதிமுகவோ அதிகாரபூர்வமாக யாரும் என்னை அணுகவில்லை. நானும் யாரிடமும் பேசவில்லை' என்றும் அவர் தெளிவுபடுத்தினார். நேற்று, இன்று என ஊடகங்களில் இதுபற்றி உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சூழ்நிலையில்தான் நான் அந்த கேள்விக்கு விளக்கம் அளித்தேன். ஆனால், அதனை வேறுவிதமாகப் பொருள்படும்படி தலைப்பிட்டு செய்திகளைப் பரப்பி பரபரப்பை உருவாக்குவது ஊடக தர்மம் அல்ல.

தமிழ்நாட்டில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை என்பது அனைவரும் அறிந்த கசப்பான உண்மை. இந்தியாவில் உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலித்துகள் முதலமைச்சர்களாகப் பதவி வகித்த வரலாறு உண்டு. ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் அது ஒரு கனவாகவே இருக்கும் என்பதை நான் அறிவேன்.

இருப்பினும், இன்றைய அரசியல் சூழ்நிலையில் அப்படி ஒரு பேச்சு நடந்ததாகக் கூறப்பட்டது. அதனால்தான், 'எனக்கும் தகவல் கிடைத்தது' என்று ஒரு ஊடகவியலாளரின் கேள்விக்கு நான் பதிலளித்தேன். அதைத் திரித்து, 'வேறொரு பொருளைத் தரும் உள்நோக்கத்துடன்' சில ஊடகங்கள் செய்திகளைப் பரப்புவது வருத்தமளிக்கிறது' என்று அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version