ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது தொடர்பாக எம்பி பிரவீன் சக்ரவர்த்தி மற்றும் செல்வப்பெருந்தகை இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த எம்பி பிரவீன் சக்ரவர்த்தி, 'கூட்டணி குறித்து கருத்து சொல்ல செல்வப்பெருந்தகை யார்? அவரது கருத்துக்கள் அனைத்தும் பயனற்றவை' என்று கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள செல்வப்பெருந்தகை, 'அறிவு ஜீவி என்று கூறிக்கொள்ளும் ஒருவர், கூட்டணி பற்றி பேச நான் யார் என்று கேட்கிறார். வடமாநிலங்களில் எங்கள் தலைவர் சென்ற பிறகு, அவர் நின்ற மேடையை தண்ணீர் ஊற்றி கழுவிய அழுக்கேறிய மதவாத மேட்டுக்குடி மனநிலையின் நீட்சியே இது. மாண்புமிகு நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காதவர்களுடன் கூட்டணி வைப்பதில் என்ன நியாயம்? இதுதான் என் கேள்வி' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், 'முதல்வர் கூட சொல்ல வேண்டாம், அந்தக் கட்சியில் உள்ள முன்னணி பொறுப்பில் உள்ள யாராவது ஒருவர் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று சொன்னால் போதுமே. அது கூட வேண்டாம், நீண்ட நேரம் உங்களிடம் சிரித்துப் பேசிய முதல்வரிடம், நம் அணியின் பிரதமர் வேட்பாளர் எங்கள் தலைவர் ராகுல் காந்திதான் என்று நீங்கள் அழுத்தமாகச் சொல்லி, அதை அவரும் ஏற்றுக்கொண்டு உங்களிடமாவது உத்தரவாதம் தந்தாரா? தந்திருந்தால் அதையாவது சொல்லுங்கள்' என்று பிரவீன் சக்ரவர்த்தியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா அல்லது பாஜகவை சட்டப்பேரவையில் விமர்சித்தால், அது ஏன் சட்டப்பேரவைக் குறிப்பில் இருந்து வேகமாக நீக்கப்படுகிறது என்பதையும் அடுத்த முறை சிரித்துப் பேசும்போது முதல்வரிடம் கேட்டுச் சொல்லுமாறு செல்வப்பெருந்தகை கேட்டுக்கொண்டுள்ளார்.
'உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது; உழைத்து இயக்கத்தை வளர்ப்பதுதான் கடினம். பதவியின் உயரம் ஒருவரின் அரசியல் உயரத்தைத் தீர்மானிப்பதில்லை; அவர் இயக்கத்திற்காகச் செய்த உழைப்பும் அர்ப்பணிப்புமே அதைத் தீர்மானிக்கும். காலம் பலரை முன்னிறுத்தும்; அதே காலம் பலரை மறந்தும் போகும். ஆனால் ஒரு பேரியக்கத்திற்காக நேர்மையாக உழைத்தவர்களின் பங்களிப்பை வரலாறு பதிவு செய்யும். காங்கிரஸ் பேரியக்கம் தனிநபர்களைவிடப் பெரியது. பதவிகளைவிட அதன் கொள்கை பெரியது' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் தான் பிரதமர் வேட்பாளர் என்போர் பக்கம் நின்று கொண்டு, என் தலைவர் திரு ராகுல் காந்தி தான் பிரதமர் எனச் சொல்லும் என் மீது கல்லெறிபவர் என்னை யார் என்று கேட்கிறார். உரக்கச் சொல்கிறேன். நான் திரு. ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என விரும்பும் காங்கிரஸ் தொண்டன். சுயமரியாதையுடன் இந்த மண்ணின் மைந்தன், பூர்வகுடி' என்றும் செல்வப்பெருந்தகை தனது கருத்தை அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.
