பாகிஸ்தானின் ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் இம்ரான் கானின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அரசுடன் தூதரக ரீதியாகப் பேசி இம்ரான் கானின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் 7 முன்னாள் கிரிக்கெட் கேப்டன்கள் அந்நாட்டு வெளியுறவு அமைச்சருக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளனர்.
இந்தக் கடிதத்தை எழுதியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன்கள் கிரெக் சேப்பல், ஆலன் பார்டர், ஸ்டீவ் வா, இயன் சேப்பல், மார்க் டெய்லர், கிம் ஹியூஸ் மற்றும் பெலிண்டா கிளார்க் ஆகியோர், இம்ரான் கானின் நிலை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர். இதில் கிரெக் சேப்பல், ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வாங்கை நேரில் சந்தித்துப் பேசவும் நேரம் கேட்டுள்ளார்.
இது குறித்துப் பேசிய கிரெக் சேப்பல், 'இம்ரான் கான் சிறையிலேயே இறந்துவிடுவாரோ என்று நாங்கள் மிகவும் அஞ்சுகிறோம். 1992-ல் உலகக் கோப்பையை வென்று தந்ததோடு, ஏழைகளுக்காகப் புற்றுநோய் மருத்துவமனைகளையும் கட்டிய ஒரு மாபெரும் வீரருக்குச் சிறையில் அடிப்படை மருத்துவ வசதிகள் மறுக்கப்படுவதாகவும், குடும்பத்தினரைச் சந்திக்கும் உரிமை கூட மறுக்கப்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
அரசியல் காரணங்களைத் தாண்டி, ஒரு சக மனிதனாக இம்ரான் கானுக்கு உரிய மனிதாபிமான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்றும் கிரெக் சேப்பல் வலியுறுத்தினார். அடிப்படை மனித உரிமைகள் கூட மறுக்கப்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2023 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 73 வயதான இம்ரான் கானின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக அவரது குடும்பத்தினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தச் சூழலில், சர்வதேச அளவில் இம்ரான் கானின் பாதுகாப்பு குறித்த கவலைகள் வலுத்து வருகின்றன.
முன்னதாக, இந்திய ஜாம்பவான்கள் கபில் தேவ், சுனில் கவாஸ்கர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்கள் மைக்கேல் ஹோல்டிங், பிரையன் லாரா உள்ளிட்ட 21 சர்வதேச முன்னாள் கிரிக்கெட் கேப்டன்கள் பாகிஸ்தான் அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தனர். அவர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, தற்போது ஆஸ்திரேலியாவின் 7 முன்னாள் கேப்டன்களும் ஒன்று திரண்டு இம்ரான் கானின் நிலை குறித்து ஆஸ்திரேலிய அரசிடம் முறையிட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தக் கடிதம், பாகிஸ்தான் அரசின் மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும், இம்ரான் கானின் பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகள் உறுதி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் ஒன்றிணைந்து மனித உரிமைக்காகக் குரல் கொடுப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
