தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே நடைபெற்ற அரசு உதவி பெறும் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். பின்னர் சென்னை திரும்பும் வழியில் திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கமளித்தார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களாலும் ஒருமனதாக பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அவையின் மரபுகளையும் விதிகளையும் மதித்து, முழுமையான நடுநிலையுடன் செயல்பட்டு வருகிறேன். அவையில் உள்ள அனைத்து அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கும் பேசுவதற்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, புதிய உறுப்பினர்கள் மற்றும் குறைவாகப் பேசும் உறுப்பினர்களைக் கண்டறிந்து அவர்களுக்கும் வாய்ப்பளிப்பதை எனது முக்கியப் பணியாகக் கொண்டுள்ளேன்' என்று தெரிவித்தார்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், முதலமைச்சரின் பதிலுரையின்போது அவையின் அமைதியைக் குலைக்கும் வகையில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். 'அவைகளுக்குள் பதாகைகளை ஏந்துவது விதிகளுக்கு முரணானது என்றாலும், உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க நான் விரும்பவில்லை' என்றும் அவர் கூறினார்.
மேலும், 'எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பேசுவதற்குப் போதிய நேரம் வழங்கப்பட்டது. ஆனால், விவாதங்களையும் முதலமைச்சர் பதில் உரையையும் முழுமையாகக் கேட்காமல் அவையைத் தடை செய்ய எதிர்க்கட்சிகள் முயன்றது கவலை அளிக்கும் விதமாக இருக்கிறது. விவாதங்களில் திமுக உறுப்பினர்களுக்கும், அதற்கு அடுத்தபடியாக அதிமுக உறுப்பினர்களுக்கும் தான் அதிக நேரம் ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் அனைத்து விவகாரங்களிலும் நடுநிலையான அணுகுமுறையே பின்பற்றப்பட்டிருப்பது தெளிவாகிறது' என்று அவர் விளக்கினார்.
நான்கு சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் இ.பி.எஸ். அளித்துள்ள கோரிக்கை மனு தற்போது பரிசீலனையில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், 'முதற்கட்ட விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்ட விசாரணைக்கான தேதிகள் முறைப்படி குறிக்கப்பட்டு நேரடி விசாரணை நடைபெறும்' என்றார்.
'துண்டுச் சீட்டு' விவகாரம் குறித்து விளக்கம் அளித்த சபாநாயகர், 'சபையை நடத்துவதற்கு எனக்கு வழிகாட்டுதலாக எந்தவிதமான துண்டுச் சீட்டுகளும் வரவில்லை. அத்தகைய சீட்டுகளின் அடிப்படையில் நான் செயல்படுவதில்லை. சர்க்காரியா கமிஷன் மற்றும் அமலாக்கத்துறை தொடர்பாக சபையில் நடைபெற்ற முந்தைய விவாதங்களின் துல்லியமான தேதிகள் மற்றும் ஆண்டுகளைச் சரிபார்ப்பதற்காக மட்டுமே பேரவை செயலகத்திடமிருந்து குறிப்புகள் பெறப்பட்டது' எனத் தெரிவித்தார்.
முன்னதாக, முதலமைச்சர் விஜய் பதிலுரையின் போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது முதல்வர் விஜய், திமுகவுக்குப் பேச வாய்ப்பு வழங்குமாறு சபாநாயகரிடம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் அமைதியாக இருக்கைக்குத் திரும்பிய நிலையில், அதன்பிறகு பேசிய சபாநாயகர், வாய்ப்பு வழங்க முடியாது எனத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபாநாயரிடம் துண்டு சீட்டு வழங்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்தே தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
