திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர சம்பவம் குறித்து விரிவாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
கொல்லப்பட்ட இளைஞரின் பெயர் பிரகாஷ் (30). இவர் டாஸ்மாக் கடையில் வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு இருந்த சிலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறியதில் பிரகாஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தவெக உண்மை சரிபார்ப்பகம் தனது எக்ஸ் தளத்தில் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன் பதிவின்படி, உயிரிழந்தவர் பிரகாஷ், சரவணன் என்பவரின் மகன், வயது 31. டாஸ்மாக் கடை அருகே முதலில் வாய் தகராறு ஏற்பட்டு, பின்னர் சிறிய அளவில் கைகலப்பு நடந்ததாகவும், எந்த ஆயுதமும் பயன்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைகலப்பின்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பிரகாஷை தள்ளியதாகவும், அப்போது அவர் சாலையோர உணவகமான ஸ்வாமி டிபன் சென்டரின் கூர்மையான விளிம்புடைய பலகையில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரது கழுத்துப் பகுதியில் வெட்டுக் காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக தவெக உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
உயிரிழப்புக்கான சரியான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக, டாஸ்மாக் கடையின் சிசிடிவி கேமரா பதிவுகளும் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்தின் பின்னணி குறித்தும், இதில் தொடர்புடையவர்கள் குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமயபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை அருகே பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுபான கடைகளுக்கு அருகே இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுவது கவலையளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதால், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
