விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, கோவையில் உள்ள புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில், 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய ஒற்றைக் கல்லால் ஆன 190 டன் எடை கொண்ட, 19 அடி உயரம் மற்றும் 10 அடி அகலம் கொண்ட இந்த பிரம்மாண்ட விநாயகர் சிலைக்கு, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலையிலேயே யாகங்கள் செய்யப்பட்டு, விநாயகருக்கு விருப்பமான கொழுக்கட்டை மற்றும் இனிப்புகள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. பக்தர்கள் தொடர்ந்து வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும், இந்த அலங்காரத்தில் விநாயகருக்கு மயில் தோகை போன்ற மாலை அணிவிக்கப்பட்டது கூடுதல் சிறப்பாக அமைந்தது. இந்த பிரம்மாண்ட அலங்காரத்தை காண ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இதேபோல், திண்டுக்கல்லில் உள்ள ஸ்ரீ நன்மை தரும் 108 விநாயகர் திருக்கோயிலிலும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இங்கு ஆசிய கண்டத்திலேயே ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட 32 அடி உயரம் கொண்ட மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் சிலை அமைந்துள்ளது.
இந்த சிறப்பு வாய்ந்த விநாயகர் சிலைக்கு, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று 14.09.26 அன்று மஞ்சள், சந்தனம், பால், தயிர், திருமஞ்சனம், பன்னீர் என 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
மேலும், கோவில் வளாகத்தில் உள்ள மற்ற 108 விநாயகர் சிலைகளுக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக, 32 அடி உயர மகா சங்கடகர சதுர்த்தி விநாயகர் சிலைக்கு, 5 டன் வண்ணப் பூக்களைக் கொண்டு கண்கவர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இந்த பூ அலங்காரத்தை கண்டு ரசித்த பக்தர்கள், புகைப்படங்கள் எடுத்தும், செல்பி எடுத்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவை மற்றும் திண்டுக்கல் ஆகிய இரு முக்கிய நகரங்களில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள், பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சிறப்பு அலங்காரங்களும், பூஜைகளும் பக்தர்களின் ஆன்மீக உணர்வை மேம்படுத்தும் வகையில் அமைந்திருந்தன.
