இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, அடிப்படை சேமிப்பு வைப்பு கணக்குகளை (BSBD – Basic Savings Bank Deposit) வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டும். அக்டோபர் 1ஆம் தேதி முதல், இந்த கணக்குகளுக்கான ஏடிஎம் மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் சில மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன.
தற்போது, எஸ்பிஐ அடிப்படை சேமிப்பு வைப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் மாதத்திற்கு நான்கு முறை வரை வங்கிக் கிளைகள் அல்லது ஏடிஎம்களில் இருந்து இலவசமாக பணம் எடுக்க முடியும். இந்த நான்கு பரிவர்த்தனைகளுக்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.15 மற்றும் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படும். ஆனால், இந்த இலவச பரிவர்த்தனை கணக்கீட்டில் ஒரு பெரிய மாற்றம் வரவுள்ளது.
இதுவரை, எஸ்பிஐ வங்கி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை இந்த மாதாந்திர இலவச பரிவர்த்தனை வரம்பில் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. வங்கி கிளைகள் அல்லது ஏடிஎம்களில் ரொக்கமாக பணம் எடுப்பது மட்டுமே கணக்கிடப்பட்டது. ஆனால், வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் இந்த நான்கு இலவச பரிவர்த்தனைகளுக்குள் சேர்க்கப்படும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் ஒரு மாதத்தில் இரண்டு முறை ஏடிஎம் மூலம் பணம் எடுத்துவிட்டு, இரண்டு முறை டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் செய்திருந்தால், உங்களின் நான்கு இலவச பரிவர்த்தனைகள் முடிந்துவிட்டதாக அர்த்தம். இதற்குப் பிறகு நீங்கள் மேற்கொள்ளும் எந்தவொரு பணப் பரிமாற்றத்திற்கும் ரூ.15 மற்றும் ஜிஎஸ்டி கட்டணமாகப் பிடித்தம் செய்யப்படும். உதாரணமாக, ஒரு மாதத்தில் நீங்கள் ஏடிஎம் மற்றும் செயலிகள் மூலம் ஆறு அல்லது ஏழு முறை பணம் எடுத்தால், பழைய விதிப்படி அவை இலவசமாக இருந்திருக்கும். ஆனால், புதிய விதிப்படி, சில பரிவர்த்தனைகளுக்குப் பிறகே கட்டணம் விதிக்கப்படும்.
இந்த புதிய விதிமுறை 'Product Code 1011-1701' என்ற தலைப்பின்கீழ் வருகிறது. இது அடிப்படை சேமிப்பு வைப்பு கணக்குகளின் வங்கிக் கிளை வழியிலான சேவைகளுக்கு மட்டுமே பொருந்தும். நிதி சாரா பரிவர்த்தனைகள் மற்றும் நிதி பரிமாற்றங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த புதிய விதிமுறை முழுக்க முழுக்க ரொக்கமாக பணம் எடுப்பதற்கு மட்டுமே பொருந்தும்.
குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்க விரும்பாதவர்கள், முதன்முறையாக வங்கிக் கணக்கு தொடங்குவோர், குறைந்த வருவாய் உள்ள குடும்பங்கள் அல்லது அடிப்படை வங்கிச் சேவைகளை மட்டுமே நம்பியிருப்போருக்காகவே இந்த BSBD கணக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய எளிய மக்கள், வீட்டு வாடகை, மளிகைப் பொருட்கள் வாங்குதல் போன்ற அன்றாடத் தேவைகளுக்காக அடிக்கடி பணம் எடுக்கும்போது, இந்த நான்கு இலவச பரிவர்த்தனைகள் மிக விரைவாக நிறைவடையக்கூடும்.
எஸ்பிஐ இந்த மாற்றத்தை ஒரு பெரிய மாற்றமாக அறிவிக்கவில்லை. மாறாக, இது சேவைக் கட்டணங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒரு திருத்தம் என்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு எஸ்பிஐயின் அடிப்படை சேமிப்பு வைப்பு கணக்கு வாடிக்கையாளர்களிடையே ஒரு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
