சமீப காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வரும் பாகிஸ்தான் அணியிடம் இங்கிலாந்து ஒரு போட்டியில் தோற்றாலும், அது இங்கிலாந்துக்கு பெரும் அவமானமாக அமையும் என இங்கிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கருத்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, பாபர் அசாம் தலைமையில் விளையாடிய முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்தது. லீட்ஸ் மற்றும் லண்டனில் நடந்த இந்த போட்டிகளில், பாகிஸ்தான் அணி ஆடிய நான்கு இன்னிங்ஸ்களிலும் 200 ரன்களைக் கூட தாண்ட முடியாமல் பரிதாபமாக இங்கிலாந்து பந்துவீச்சாளர்களிடம் வீழ்ந்தது. அவர்களின் பேட்டிங் திணறிய விதம் பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியது.
இந்த தொடர் தோல்விகளால் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தொடர் முடிவதற்கு முன்பே ஒரு விசித்திரமான முடிவை எடுத்தது. முகமது ரிஸ்வான், இமாம்-உல்-ஹக், சல்மான் அலி ஆகா உள்ளிட்ட 7 முக்கிய வீரர்களை அணியிலிருந்து அதிரடியாக நீக்கியது. அவர்களுக்குப் பதிலாக, சர்வதேச அனுபவம் இல்லாத 5 புதுமுகங்கள் உட்பட 7 புதிய வீரர்களை கடைசிப் போட்டிக்காக அவசர அவசரமாக களமிறக்கியுள்ளது.
இந்த திடீர் மாற்றங்கள் குறித்து தனது போட்காஸ்டில் பேசிய ஸ்டூவர்ட் பிராட், பாகிஸ்தான் வீரர்களின் சுமாரான ஆட்டம் குறித்து ஆரம்பத்தில் விமர்சித்ததற்கு வருத்தம் தெரிவித்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக சீரழிவு, தேர்வுக்குழுவின் குளறுபடிகள் மற்றும் அடிக்கடி பயிற்சியாளர்களை மாற்றியது போன்றவையே அணியின் இந்த பரிதாப நிலைக்கு காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தொடர் தொடங்குவதற்கு முன்பே பாகிஸ்தான் பலவீனமான அணி என்றும், இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் தொடரை வெல்லும் என்றும் தான் கணித்தபோது பாகிஸ்தான் ரசிகர்கள் தன்னை விமர்சித்ததை பிராட் நினைவு கூர்ந்தார். தற்போது களத்தில் நடக்கும் யதார்த்தத்தைப் பார்த்தால் உண்மை புரியும் என்றும் அவர் கூறினார்.
பர்மிங்காமில் நடைபெறவிருக்கும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி எளிதாக வெற்றி பெற வேண்டும் என்றும், இந்த சொதப்பல் பாகிஸ்தான் அணியிடம் இங்கிலாந்து ஒரு போட்டியில் தோற்றால் கூட அது இங்கிலாந்துக்குத்தான் மாபெரும் அவமானமாக அமையும் என்றும் ஸ்டூவர்ட் பிராட் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
வீரர்களை மாற்றி நாடகம் நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த செயல், கிரிக்கெட் உலகில் பெரும் கேலிக்குள்ளாகியுள்ளது. இந்த திடீர் மாற்றங்கள் கடைசி டெஸ்டில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
