சினிமா உலகில் பல அற்புதமான கதாபாத்திரங்கள் வந்துள்ளன. சில கதாபாத்திரங்கள் நம் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகின்றன. அந்த வகையில், 'கங்குபாய் கத்தியாவாடி' திரைப்படம், சாதாரண பெண்களின் வாழ்க்கையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்திய நிஜ கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஆலியா பட், கங்குபாய் என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார்.
'மகாநதி' படத்தில் வரும் சோனாகச்சி சிவப்பு விளக்கு பகுதி காட்சிகள், பாலியல் தொழில் பின்னணியில் உள்ள சுரண்டலை எனக்கு முதன் முதலில் உணர்த்தியது. அதுவரை, அவர்களை வெறும் கும்மாளக் கூட்டமாக நினைத்த என் எண்ணம் நொறுங்கியது. அந்தப் படத்தைப் பார்க்கும் துணிச்சல் எனக்கு வரவில்லை. ஆனால், 'கங்குபாய் கத்தியாவாடி' படத்தை தைரியமாகப் பார்த்தேன். 2022-ல் வெளியான இந்தப் படம், பயோகிராஃபிக்கல் க்ரைம் – டிராமா வகையைச் சார்ந்தது. ஆலியா பட் தவிர, அஜய் தேவ்கன், சாந்தனு மஹேஸ்வரி, விஜய் ராஸ் போன்றோரும் நடித்துள்ளனர். ஆனால், படத்தின் உயிர்நாடியாக ஆலியா பட் தான் இருக்கிறார்.
உண்மையான கங்குபாய் ஹர்ஜீவன்தாஸ், குஜராத்தில் பிறந்தவர். காதல் கணவனால் ஏமாற்றப்பட்டு, மும்பையின் காமத்திபுரா சிவப்பு விளக்குப் பகுதியில் பாலியல் தொழிலாளியாக விற்கப்பட்டார். பின்னர், சக தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், மரியாதைக்காகவும் அவர் போராடினார். பிரதமர் நேருவை சந்திக்கும் அளவுக்கு அவரது குரல் உயர்ந்தது. இணையத்தில் அவரைப் பற்றி தேடினால், அவர் ஒரு சமூக சேவகர், பாலியல் தொழிலாளி, பாலியல் தொழில் கூடத்தின் தலைவி என பல தகவல்கள் கிடைக்கின்றன.
இந்தப் படத்தில், நடிகையாக வேண்டும் என்ற கனவுகளுடன் வரும் கங்கா, காதலனால் காமத்திபுராவில் விடப்படுகிறாள். அங்கு ஷீலா என்ற புரோக்கரிடம் சிக்கி, பாலியல் தொழிலாளியாக மாறுகிறாள். ஆனால், கங்குவாய் தனது உரிமைகளுக்காகப் போராடத் தொடங்குகிறாள். 'இன்று ஞாயிற்றுக்கிழமை. நாங்கள் கஸ்டமர்களை ஏற்கமாட்டோம். இதுவும் ஒரு தொழில்தான். ஒருநாள் விடுமுறை வேண்டும்' என்று கூறி, வார விடுமுறைக்காக குரல் கொடுக்கிறாள். இது அவளது முதல் உரிமைக் குரல். பொது இடங்களுக்கு வந்தாலும் தான் மக்களில் ஒருத்திதான் என்று தனது உரிமையை நிலைநாட்டுகிறாள். கங்கு, சக பெண்களுக்கு ஒரு சகோதரியாக மாறி, அவர்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் குழந்தைப்பருவம் களவாடப்படாமல் இருப்பதற்காகவும் போராடுகிறாள்.