சென்னை: 2026 ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த தல தோனியின் ஆட்டம், வரும் மே 18 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அரங்கேற அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இந்தப் போட்டி, தோனி இந்த சீசனில் விளையாடும் முதல் போட்டியாக அமையலாம். மேலும், இது ஒரு சகாப்தத்தின் முடிவாகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், தோனி நாளை மறுதினம் (மே 18) ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் களம் இறங்க அதிக வாய்ப்புள்ளதாக தனது யூடியூப் பக்கத்தில் கூறியுள்ளார். 'தோனி கடந்த 2 முதல் 3 போட்டிகளாகவே விளையாடும் அளவிற்குத் தயாராக இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடப் பலமான வாய்ப்புகள் உள்ளன' என அஸ்வின் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தகவல் சென்னை ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது.
இந்த சீசன் தொடங்கியதிலிருந்தே காயம் காரணமாக ஒரு போட்டியில் கூட விளையாடாத தோனி, தற்போது முழு உடல் தகுதியை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. பயிற்சியின் போது கெண்டைக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டதால், சுமார் 2 மாதங்களாக அவர் விளையாடவில்லை. சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி கூறுகையில், 'தோனி பேட்டிங் செய்யத் தயாராக இருக்கிறார், ஆனால் ஓடி ரன்களை எடுப்பதில் மட்டும் சிறிய சிக்கல் இருக்கிறது' எனத் தெரிவித்திருந்தார்.
சிஎஸ்கே அணி பிளே-ஆப் வாய்ப்பைத் தக்கவைக்க, இனி வரும் 2 போட்டிகளிலும் வென்றே ஆக வேண்டும். இக்கட்டான இந்தச் சூழலில், கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவிக்க தோனி போன்ற ஒரு அனுபவ வீரர் அணிக்குத் தேவைப்படுகிறார். மேலும், மே 18-ம் தேதி நடைபெறும் இந்தப் போட்டி, சிஎஸ்கே அணி சேப்பாக்கத்தில் விளையாடும் கடைசி லீக் ஆட்டமாகும். ஒருவேளை சிஎஸ்கே அணி பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறினால், இதுவே தோனியின் கடைசி ஐபிஎல் போட்டியாகவும் அமைய வாய்ப்புள்ளது. இதனால், தனது விருப்ப மைதானமான சேப்பாக்கத்தில் ரசிகர்களுக்கு விடை கொடுக்கும் வகையில் தோனி களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.