சட்டப்பேரவையில் மதுவிலக்கு குறித்து பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி ஆற்றிய உரைக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் 'Excellent' எனப் பாராட்டி பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
சட்டப்பேரவையில் பேசிய சௌமியா அன்புமணி, டாஸ்மாக் மதுபான விற்பனையால் குடும்பங்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். பெண்களின் சுதந்திரம் மற்றும் குடும்பங்களின் நிதி நிலைமை டாஸ்மாக் மதுபான விற்பனையால் சீர்குலைவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது ரூ.789.95 கோடிக்கும், 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ரூ.725.56 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்களை அவர் வெளியிட்டார்.
மேலும், குழந்தைகளின் கல்வி, மகள்களின் திருமணம், வீடு கட்டுதல் போன்ற குடும்பங்களின் முக்கிய சேமிப்புகள் மதுபானங்களுக்காக செலவிடப்படுவதாகவும், எனவே மதுவிலக்கை குறைந்தபட்சம் கொள்கையாகவாவது அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மதுவிலக்குக்காக பா.ம.க. மேற்கொண்ட சட்டப் போராட்டத்தின் விளைவாக தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டதையும் அவர் நினைவுகூர்ந்தார். ஆளும் திமுக அரசு பொறுப்பேற்ற முதல் நாளிலேயே 717 மதுக்கடைகளை மூடுவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டது ஒரு மிகப்பெரிய சாதனை என்றும் சௌமியா அன்புமணி குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் அவையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை சௌமியா அன்புமணியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவர் சட்டப்பேரவையில் மிகவும் ஆக்கப்பூர்வமாக பேசுவதாகவும் பாராட்டினார். இந்த பாராட்டுக்களுக்குப் பிறகு, துணை சபாநாயகர் சௌமியா அன்புமணியை பாராட்டிய வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள கமல்ஹாசன், அவரது சட்டப்பேரவை செயல்பாடுகளைப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
கமல்ஹாசன் தனது எக்ஸ் தளப் பதிவில், 'Excellent' சட்டமன்றத்தில் தனக்குக் கிடைக்கும் நேரத்தை மிகச் சரியாகவும், துல்லியமான தகவல்களோடும் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தும் சகோதரி சௌமியா அன்புமணி அவர்களைப் பாராட்டுகிறேன்' என்று தெரிவித்துள்ளார். முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள சௌமியா அன்புமணி, குறுகிய காலத்திலேயே பல்வேறு மக்கள் பிரச்சனைகளை சட்டப்பேரவையில் அழுத்தமாக முன்வைத்து வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ள இந்த சூழலில், ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களிடமிருந்தும் சௌமியா அன்புமணியின் செயல்பாடுகள் குறித்து பாராட்டுகள் வெளிவருவது குறிப்பிடத்தக்கது. இது அவரது சட்டமன்றப் பணிகளுக்கு மேலும் வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.
