மருத்துவப் படிப்பான எம்.பி.பி.எஸ். மாணவர்களிடம், நிர்ணயிக்கப்பட்ட நான்கரை ஆண்டுகளுக்கும் மேல் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பல மருத்துவக் கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகார்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, 'எம்.பி.பி.எஸ் மாணவர்களிடம் நான்கரை ஆண்டுகளுக்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் மாணவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?' என்று கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மூலம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், 'எம்.பி.பி.எஸ் படிப்பு என்பது நான்கரை ஆண்டுகள் மருத்துவப் படிப்பு மற்றும் ஒரு ஆண்டு பயிற்சி என மொத்தம் ஐந்து ஆண்டுகள் கொண்டது. ஆனால், பல கல்வி நிறுவனங்கள் நான்கரை ஆண்டுகளைத் தாண்டி, மேலும் ஆறு மாதங்களுக்கான கல்வி கட்டணத்தை மாணவர்களிடம் வசூலித்து வருவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில், வரையறுக்கப்பட்டதை விட அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக 11 புகார்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், இந்த புகார்கள் குறித்து ஆராயும்போது, மாணவர்கள் தரப்பில் அதிக கட்டணம் வழங்கியதற்கான ஆவணங்கள் முறையாக இல்லாமல் இருந்தன. இருப்பினும், இந்த புகார்களின் அடிப்படையில், கூடுதலாக கல்வி கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். விதிகளை மீறி நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அவர் உறுதியளித்தார்.