தங்கம் மற்றும் வெள்ளி விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நகை பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒருவிதமான எதிர்பார்ப்பு நிலவுகிறது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை ஏறுமா அல்லது இறங்குமா என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.
உலக தங்கம் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், சுரங்கச் செலவுகளை விட தங்கத்தின் விலை அதிகரித்ததால், உற்பத்தியாளர்கள் முன்னெப்போதும் இல்லாத லாபத்தை ஈட்டியுள்ளனர். இருப்பினும், தங்கத்தின் விலை உயர்வால் சாமானிய மக்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
அமெரிக்க – ஈரான் போர் காரணமாக தங்கத்தின் விலை குறையத் தொடங்கியபோது, இந்த விலை சரிவு நீடிக்கும் என நிபுணர்கள் கணித்தனர். ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்துக்கும் கீழே குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால், இந்த கணிப்புகள் தவறாகின.
ஆகஸ்ட் மாதம் தொடங்கியதிலிருந்து தங்கத்தின் விலை விறுவிறுவென உயரத் தொடங்கியது. ஒரு சவரன் தங்கம் ரூ.1.20 லட்சத்தை தொட்டது. எனினும், இந்த தற்காலிக விலை உயர்வு கடந்த வாரத்தில் முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த வாரத்தில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாக குறைந்துள்ளது. இது நகை பிரியர்களுக்கு ஒருவிதத்தில் ஆறுதல் அளித்துள்ளது. இதற்கிடையில், தங்க இறக்குமதி வரியை 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகின்றன. அவ்வாறு வரி குறைக்கப்பட்டால், ஒரு சவரன் தங்கத்தின் விலையில் ரூ.10 ஆயிரம் வரை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று (ஆகஸ்ட் 31) நிலவரப்படி, தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.1,080 குறைந்து ரூ.14,370-க்கும், ஒரு சவரன் ரூ.1,080 குறைந்து ரூ.1,14,960-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.260-க்கு விற்பனையானது.
ஆனால், இன்று (செப்டம்பர் 1) தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், தங்கத்தின் விலை மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து, ரூ.1,15,080-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 உயர்ந்து ரூ.14,385-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையைப் பொறுத்தவரை, ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.255-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,55,000-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்கள் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
