சென்னையில் ஆட்டோ குறைந்தபட்சக் கட்டணம் ₹60 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்றும், இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என்றும் அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ். பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த 13 ஆண்டுகளாக ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாததால், ஓட்டுநர்களின் வருமானம் உயரவில்லை என்றும், பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருவதாகவும் கூறினார். தற்போது 14 ஆம் ஆண்டு தொடங்கியுள்ள நிலையில், விலைவாசிக்கு ஏற்ப மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளதையும், அனைத்து பொருட்களின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், மத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்தி, ஆன்லைன் அபராதம் என்ற பெயரில் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாக அவர் குற்றம்சாட்டினார். எனவே, 1.5 கிலோ மீட்டருக்கு ₹60 கட்டணமாகவும், அதன்பிறகு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ₹30 கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், காத்திருப்பு மற்றும் இரவு நேர பயணங்களுக்கான கட்டணங்களையும் நிர்ணயிக்க வேண்டும் என்றும் அனைத்து கூட்டமைப்புகள் சார்பில் அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களையும் சந்தித்து மனுக்கள் வழங்கியுள்ளதாகவும், தங்களின் கோரிக்கைகளுக்கு முதலமைச்சரும், போக்குவரத்துத் துறை அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆட்டோ தொழிலை நம்பி 5 லட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருவதாகவும், எனவே அரசு இருசக்கர வாகன டாக்ஸியை முறைப்படுத்த வேண்டும் என்றும், முறைப்படுத்துவதற்கு முன்பாக தற்போதுள்ள சட்டத்தின்படி அதைத் தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இது குறித்து போக்குவரத்து ஆணையர், போக்குவரத்து அமைச்சர் மற்றும் முதலமைச்சரிடமும் மனுக்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
வரும் 28 ஆம் தேதி நடைபெறும் போக்குவரத்து மானியக் கோரிக்கைகளில் இது குறித்த அறிவிப்பு வெளியாக வேண்டும் என்றும், இல்லையெனில் அனைத்து சங்கங்கள் சார்பிலும் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் எஸ். பாலசுப்பிரமணியன் எச்சரித்தார்.
