தமிழ்நாட்டில், 23.8.2010-க்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார்.
ஆசிரியர் பணி என்பது வெறும் அறிவைப் போதிப்பது மட்டுமல்ல, அது மனித வளத்தை உருவாக்கி சமூகத்தின் எதிர்காலத்தை செதுக்கும் ஒரு உயரிய பொறுப்பு என்றும், பாடத்திட்டங்களை மாணவர்களின் வயது மற்றும் புரிந்துகொள்ளும் திறனுக்கு ஏற்ப எளிமையாகக் கற்பித்தல், கற்றல் குறைபாடுகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்தல், மாணவர்களிடம் நற்பண்புகள், சமூக பொறுப்பு, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்தல், ஒவ்வொரு மாணவரிடமும் உள்ள தனித்துவமான திறமைகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துதல் ஆகியவை ஆசிரியர்களின் தலையாய பணிகள் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டார்.
தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் (NCTE) 23.8.2010 தேதியிட்ட அறிவிப்பின்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் செய்யப்படுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. பல ஆண்டுகளாக, குறிப்பாக 15 முதல் 20 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித இடையூறும் இன்றி சிறப்பாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இது தொடர்பாக 1.9.2025 தேதியிட்ட உரிமையியல் மேல்முறையீட்டு சிவில் அப்பீல் எண் 1405/2025, 1385/2025 மற்றும் 1386/2025 வழக்குகளிலும், சீராய்வு மனுவின் மீதான 29.5.2026 தேதியிட்ட தீர்ப்பிலும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் காரணமாக, தமிழ்நாட்டில் சுமார் 3,28,701 அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பதவி உயர்வு பெற முடியும் என்ற நிலை உள்ளது. தேர்ச்சி பெறாதவர்கள் பணியிழப்புக்கும் ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில் உள்ளனர். மேலும், பணியில் உள்ள ஆசிரியர்கள் 31.8.2028-க்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
இந்நிலையில், 15 முதல் 20 ஆண்டுகள் வரை தடையின்றி பணியாற்றி, ஓய்வு பெறும் வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை தகுதித் தேர்வு எழுத வலியுறுத்துவது, அவர்களின் வாழ்வாதார உரிமையைப் பாதிக்கும் செயல் என்று அமைச்சர் ராஜ்மோகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். எனவே, இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு, நீண்டகால சேவை, வாழ்வாதாரம் மற்றும் நலன் ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிகளில் 23.8.2010-க்கு முன்பு நடைமுறையில் இருந்த விதிமுறைகள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, அவர்களின் நீண்டகால பணி அனுபவம் மற்றும் பணி பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து முழுமையான மற்றும் நிரந்தர விலக்கு அளிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.
இதற்கேற்ப, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் பிரிவு 23-ல் உரிய சட்டத் திருத்தம் மேற்கொண்டு, 23.8.2010-க்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்கும் வகையில் தேவையான சட்டப்பூர்வ ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும், தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் (NCTE) வழியாக இது தொடர்பான தெளிவான மற்றும் உரிமையுள்ள அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல் சுற்றறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் மத்திய அரசை பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.
இந்த நடவடிக்கைகள் மூலம், நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட உரிய பணிப் பலன்கள் எவ்வித தடையும் இன்றி தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யுமாறு மத்திய அரசை பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.
