கோவளத்தில் நடைபெற்ற தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டில், தமிழக முதலமைச்சர் விஜய் பேசியது குறித்து சட்டமன்றத்தில் ஏன் விளக்க அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "துறை ரீதியான நிதிநிலை அறிக்கைகள் மற்றும் அன்றாடம் எழும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் வினாக்களுக்கு, அமைச்சர்களின் பதில்கள் 'பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை என்ன?' என்பது போல அர்த்தமற்றதாகவும், திசைதிருப்பும் வகையிலும் அமைந்துள்ளன. நேரலை ஒளிபரப்பில் அவர்களின் இத்தகைய பதில்கள் சமூக ஊடகங்களுக்குப் பயன்படுமே தவிர, மக்களுக்கு எந்தப் பயனையும் தராது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "பேரவைத் தலைவர் நியாயத்திற்கும் அநியாயத்திற்கும் இடையே சிக்கித் தவிக்கிறார். அமைச்சர்களின் அடாவடியான, அருவருக்கத்தக்க பேச்சுக்கள் லட்சக்கணக்கான மக்களிடையே சென்றடைந்த பிறகு, அதைக் குறிப்பிலிருந்து நீக்குவது 'குதிரை ஓடிய பிறகு லாயத்தைப் பூட்டுவதற்குச் சமம்'. இதனால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை" என்றும் அவர் கூறியுள்ளார்.
காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சனை தீவிரமடைந்துள்ள சூழலில், தமிழகத்தில் எதிர்ப்புகள் எழும் என்று எண்ணி, எந்தவித முன் அறிவிப்புமின்றி, தமிழகத்தின் கோவளம் பகுதியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்னிந்திய முதலமைச்சர்களுடைய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், மேகதாது பிரச்சனை, காவிரி நதிநீர்ப் பங்கீடு, பெரியாறு அணைக்கட்டு உயரத்தை 152 அடியாக உயர்த்துவது, ஆந்திராவுடனான பாலாறு குறித்த பிரச்சனைகள் குறித்து தமிழக முதலமைச்சர் விஜய் பேசியது என்ன என்பது குறித்து சட்டமன்றத்திற்கு அறிக்கையாகச் சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால், ஏன் முதலமைச்சர் விஜய் அதைச் செய்யவில்லை? இது குறித்து எதிர்கட்சியினர் யாரும் ஏன் கேள்வி எழுப்பவில்லை?" என்றும் கிருஷ்ணசாமி தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அமைச்சர்களின் பதில்கள் 'Reels content' மற்றும் மீடியா வெளிச்சத்தை மட்டுமே குறிவைத்து பேசுவதாகவும், கோவளம் மாநாட்டில் முதலமைச்சர் விஜய் பேசியது குறித்து சட்டமன்றத்தில் விளக்க அறிக்கை சமர்ப்பிக்காதது ஏன் என்றும், தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் திசைமாறிப் போகிறதா என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
