மதுரை சிந்தாமணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கோயில் பூசாரி பரமசிவம், காவல்துறையினரின் கொடூரத் தாக்குதலால் உயிரிழந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த பரமசிவம், அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட வாகன நிறுத்துமிடம் தொடர்பான பிரச்சனை தொடர்பாக கடந்த மாதம் 19ஆம் தேதி விசாரணைக்காக சிந்தாமணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, காவல்துறையினர் அவரை மிகக் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, பரமசிவத்திற்கு வாந்தி, மயக்கம் மற்றும் கடுமையான தலைவலி ஏற்பட்டதாகத் தெரிகிறது. அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறப்பதற்கு சற்று முன்னர், காவல்துறையினர் தம்மை கொடூரமாகத் தாக்கியதே தனது உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடுவதற்கு காரணம் என்று பரமசிவம் ஒரு காணொலியில் பதிவு செய்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு காவல்துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்ட பரமசிவம், ஜூலை 26ஆம் தேதி அன்று வீட்டில் கீழே விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தியும் அதனை மறுத்து வெளியேறிய நிலையில், அவரது உடல்நிலை தீவிரமாகப் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி உயிரிழந்ததாகவும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், காவல்துறையினர் தாக்கியதால்தான் தனது கணவர் உயிரிழந்ததாக பூசாரி பரமசிவத்தின் மனைவியும், மகனும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்நிலைய சிசிடிவி காட்சிகளும் இல்லை என்று காவல்துறையினர் கூறுவதாகவும் பூசாரியின் மனைவி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். இதனிடையே, பூசாரி பரமசிவத்தின் உடலை வாங்க குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததால், மதுரையில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
மதுரையில் காவல்துறை தாக்குதலால் பூசாரி உயிரிழப்பு? பரபரப்பு

Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை