நடிகர் விவேக்கின் கனவை நிறைவேற்றும் வகையில், வீ.த.லீடர்ஸ் அமைப்பு சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அண்ணாமலை, நடிகர் விவேக்கின் மரக்கன்று நடும் பணியைப் பாராட்டினார். தன் வாழ்நாளில் 37 லட்சம் மரக்கன்றுகளை நட்ட நடிகர் விவேக், 1 கோடி மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டார். மீதமுள்ள 63 லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற அவரது கனவை வீ.த.லீடர்ஸ் அமைப்பு நிறைவேற்றி வருவதாக அண்ணாமலை குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் உள்ள 1 லட்சத்து 6 ஆயிரம் நீர்நிலைகளில், 50,197 நீர்நிலைகள் தற்போது இல்லை என்ற மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் தகவலை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, மாநிலத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பணிகளை சரியாக செய்யாவிட்டால், முதல் குற்றச்சாட்டை தாங்கள் வைப்போம் என்றும் அவர் கூறினார். சில விஷயங்களை ஆளுங்கட்சியினர் சரியாகச் செய்கிறார்கள், தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது திருத்திக்கொள்கிறார்கள். இது ஒரு நல்ல அரசியல் போக்கு என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய எதிர்க்கட்சிகளின் அரசியல், ஆளுங்கட்சியைக் கவிழ்த்து ஆட்சிக்கு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், இதற்கு 'ஆபரேஷன் மேகாலயா' என்று பெயர் சூட்டியுள்ளதாகவும் அண்ணாமலை விமர்சித்தார். 10 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு வந்து சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
