கால்பந்தில் உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் நாடு, தற்போது கிரிக்கெட்டிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை படைத்து உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 21 போட்டிகளில் வெற்றி பெற்று, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நீண்டகால உலக சாதனையை ஸ்பெயின் தகர்த்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் 2028 டி20 உலகக்கோப்பைக்கான ஐரோப்பிய தகுதிச் சுற்றுப் போட்டியில், பின்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் ஸ்பெயின் இந்த மகத்தான சாதனையை எட்டியுள்ளது. இப்போட்டியில், பின்லாந்து அணி நிர்ணயித்த 131 ரன்கள் என்ற இலக்கை ஸ்பெயின் அணி மிக எளிதாகக் கடந்து வெற்றி பெற்றது.
இதன் மூலம், கடந்த 2003-04 ஆம் ஆண்டுகளில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து படைத்திருந்த தொடர்ச்சியான 20 வெற்றிகள் என்ற உலக சாதனையை ஸ்பெயின் தற்போது முறியடித்துள்ளது. ஆஸ்திரேலியா அப்போது 17 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெயின் அணியின் இந்த வியக்கத்தக்க வெற்றிப் பயணம் கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஐல் ஆஃப் மேன் அணிக்கு எதிரான போட்டியிலிருந்து தொடங்கியது. கடந்த 2019 ஆம் ஆண்டு தான் ஸ்பெயின் அணி சர்வதேச டி20 கிரிக்கெட் தகுதியைப் பெற்றது. அன்றிலிருந்து இன்றுவரை விளையாடியுள்ள 50 டி20 போட்டிகளில் 41 போட்டிகளில் வெற்றியும், வெறும் 8 போட்டிகளில் மட்டுமே தோல்வியும் கண்டுள்ளது.
கடந்த 1992 ஆம் ஆண்டு ஐசிசியின் இணை உறுப்பினராக ஸ்பெயின் கிரிக்கெட் சங்கம் சேர்ந்தது, பின்னர் 2017 ஆம் ஆண்டு முழு அங்கீகாரத்தைப் பெற்றது. இந்த வரலாற்றுச் சாதனைக்கு மத்தியில், ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டு கவுன்சில், கிரிக்கெட் விளையாட்டை ஸ்பெயினின் அதிகாரப்பூர்வ விளையாட்டாக அங்கீகரித்துள்ளது.
லா பெடரேஷன் ஸ்பானியோலா டி கிரிக்கெட் என்ற புதிய அமைப்புக்கு அரசு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் மூலம், ஸ்பெயின் கிரிக்கெட் வாரியத்திற்கு அரசு நிதியுதவி கிடைப்பதோடு, பள்ளிகளில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பதற்கான வாய்ப்புகளும் உருவாகியுள்ளன.
உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் ஸ்பெயின் அணி, கால்பந்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது போலவே, கிரிக்கெட்டிலும் தனது வலிமையை நிரூபிக்கத் தயாராகி வருகிறது. இந்த சாதனை, ஸ்பெயினில் கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சியை மேலும் வேகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
