கேரளாவில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 9 நாட்கள் ஆகியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி வெற்றி பெற்றும், முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் பெரும் குழப்பம் நீடிக்கிறது. 102 தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வரவுள்ள நிலையில், கட்சிக்குள் நிலவும் இந்த இழுபறி தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்-மந்திரி பதவிக்கு கே.சி.வேணுகோபால், வி.டி.சதீசன், ரமேஷ் சென்னித்தலா ஆகிய மூன்று முக்கிய தலைவர்கள் இடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. இதனால், அவர்களின் ஆதரவாளர்கள் தனித்தனியாக பேரணிகள் நடத்தியும், சாலைகளில் பேனர்கள் வைத்தும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கோழிக்கோடு நகரின் காரச்சேரி பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஒரு பேனர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 'கே.சி.வேணுகோபால் உங்களுக்கு விருப்பமானவராக இருக்கலாம். ஆனால், அவரை முதல்-மந்திரியாக மக்கள் ஏற்க மாட்டார்கள். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டும் வயநாடுக்கு வர வேண்டாம். இது போன்ற செயல்களால் மக்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள்' என்று அந்த பேனரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது போன்ற சம்பவங்கள் கட்சித் தொண்டர்களிடையே மோதலை ஏற்படுத்தும் என அஞ்சிய காங்கிரஸ் மேலிடம், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும், யாருக்கும் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. வயநாடு மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் அருகிலும் வைக்கப்பட்டிருந்த பேனரில், 'கே.சி.வேணுகோபாலை நீங்கள் தேர்வு செய்தால், கேரள மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. முதல்-மந்திரி யார் என்பதை அறிவிப்பதில் தாமதம் நீடிக்கும் நிலையில், இந்த பேனர் சம்பவங்கள் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.