தமிழக அரசின் பட்ஜெட் மற்றும் மதுபான விற்பனை தொடர்பான புதிய இணையதள சேவை குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். விஜய் தலைமையிலான த.வெ.க அரசு பொறுப்பேற்று தாக்கல் செய்த முதல் பட்ஜெட், அரசின் இயலாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நிதிநிலையை சீர்செய்ய குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்றும், அரசின் கடன் சுமை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகவும் ஆர்.பி.உதயகுமார் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு நிலவரப்படி அரசின் கடன் சுமை 10 லட்சம் கோடியாக உள்ள நிலையில், இந்த நிதி ஆண்டில் மட்டும் சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 1.22 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிதித்துறை செயலாளர் எம்.ஏ.சித்திக் ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த கடன் அளவை குறைக்க 50 ஆண்டுகள் ஆனாலும் முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
த.வெ.க அரசு பட்ஜெட்டில் அறிவிப்புகளுக்கு பஞ்சமில்லை என்றாலும், அவை அனைத்தும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மாவின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயர் மாற்றங்கள் மட்டுமே என ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்விக்கான நிதி குறைக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், ஜென்சி தலைமுறையால் ஆட்சிக்கு வந்த விஜய்க்கு கல்வியை விட மதுபான விற்பனையை உயர்த்துவதே கவலையாக இருப்பதாகக் கூறினார்.
இதன் ஒரு பகுதியாக, ஆன்லைனில் மதுபானம் முன்பதிவு செய்து, எந்தக் கடையில் வேண்டுமானாலும் சரக்கு பெற்றுக் கொள்ளலாம் என்ற புதிய இணையதளம் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபான இருப்பு விவரங்களை வாடிக்கையாளர்கள் நேரடியாகப் பார்க்க முடியும். இதன் மூலம் தங்களுக்குத் தேவையான பிராண்ட் சரக்கு கிடைக்கிறதா என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய சேவையைப் பயன்படுத்த, இணையதளத்தில் நுழையும்போது 21 வயது நிறைவடைந்தவர் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 முதல் 25 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் உள்ள டாஸ்மாக் கடைகள் அல்லது கடை எண், மாவட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் இணையதளத்தில் தேர்வு செய்து கொள்ளலாம். தேர்வு செய்த மதுபானத்திற்கான தொகையை ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் செலுத்திவிட்டு, குறிப்பிட்ட டாஸ்மாக் கடைக்குச் சென்று சரக்கைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, பட்ஜெட் அறிவிப்புகளை விட அதிர்ச்சிகரமானதாகவும், அதிரடியானதாகவும் இருப்பதாக ஆர்.பி.உதயகுமார் குறிப்பிட்டுள்ளார். தாலிக்கு தங்கம் திட்டம், மிதிவண்டி திட்டம், மடிக்கணினி திட்டம், மகளிருக்கு ஆடுகள் வழங்கும் திட்டம், வீடு வழங்கும் திட்டம் போன்றவற்றை 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே 2011-ஆம் ஆண்டில் அம்மா வழங்கியதாகவும், அந்தத் திட்டங்களுக்கு வெற்றி என்ற பெயரைச் சூட்டி, பெயர் மாற்றத்தில் த.வெ.க அரசு கின்னஸ் சாதனை படைத்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
மொத்தத்தில், த.வெ.க அரசு தங்கள் இயலாமையால் விழிபிதுங்கி நிற்பது நிதிநிலை அறிக்கையின் மூலம் கண்கூடாகத் தெரிவதாக ஆர்.பி.உதயகுமார் தனது விமர்சனத்தை முடித்துக்கொண்டார்.
